வெள்ளாளக் கவுண்டர்கள் கூட்டப்  பெயர்களின் காரணங்கள் 


நமது கூட்டங்களுக்கான பெயர்கள் உண்டானதற்கான காரணங்களை பல தமிழ் அறிஞர்கள் - கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் திரு ராசு,

திரு டி .எம் .காளியப்பன் , திரு  கு . சேதுராமன் , போன்ற இன்னும் பல தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இதுதான் காரணம் என்று எல்லாவற்றுக்கும் பெயர் காரணம் என்று யாரும் உறுதியாகக் கூறாமல் இவ்வாறு இருக்கலாம் என்றுதான் கூறியுள்ளனர். நானும் இயன்றவரை இதுதான் காரணம் என்று பெயர் காரணங்களைக் இங்கு கூறியுள்ளேன்.  கூடுதலாக பல சொற்கள் மருவி சொந்தப் பெயர் இல்லாமல்  வேறு பெயர்கள் கொண்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக புழக்கடை என்ற சொல்லை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள்? அதற்கான பொருளும் பாமரர் அறியார்.  புடக்காலி என்றால் அனைவரும் அறிவர். இது ஒன்று மட்டுமல்ல . ஏராளமான சொற்கள் உள்ளன பட்டியலிட்டால்  அது மட்டுமே ஒரு தனிக் கட்டுரை போல் ஆகிவிடும்.  முக்கியமாக 

நம் கூட்டத்தின் பெயர்களில் ஒன்றில் கூட நாம் இன்று வணங்கி வரும் கடவுள்கள் பெயர் ஒன்று கூட இல்லாததை கவனிக்க வேண்டும். பிராமணர்கள் 

தங்களை இன்ன கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று ரிஷிகளின் பெயர்களைக் கொண்டு அவர்களுக்கு பிறந்தவர்கள் என்று கூறி வருகின்றனர். மற்ற இனத்தவரையும் அவ்வாறே தங்களை இன்ன கோத்திரத்தார் என்று கூறச் செய்துள்ளனர்.  நம்மவர்கள் மட்டுமே கூட்டத்தினர் எனக் கூறி வருகின்றனர்.  மற்ற இனத்தவரைப் போல் நாம் குலம் என்று கூறக் கூடாது. குலம் என்பது சாதியைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக வன்னிய குல சத்திரியர், தேவேந்திர  குலத்தினர் போன்றவைகள். தவறாக ஏதும் இருப்பின் தாங்கள் இக்கட்டுரையில்  கடைசியாகக் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு  தெரிவித்தால்  சரியாக இருப்பின் திருத்திக்  கொள்கிறேன் 


நமது வரலாறு இரண்டாயிரம் அல்லது அதற்கு மேலும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  இருக்க வேண்டும். தமிழகத்தில் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியேறியுள்ளனர். கோவை மாவட்டம் இப்பொழுது போல் இல்லாமல் அப்பொழுது  எங்கும் காடாக இருந்துள்ளன. அந்தக் காட்டை அழித்து வயல்களாக்கியதை இன்றும் நாம் வயலுக்கு போகிறோம் என்று நம்மவர்கள் சொல்லாமல் காட்டுக்கு போய் வருகிறேன் என்றுதான் கூறி வருகிறோம். காட்டை அழிப்பது என்பது இப்பொழுது உள்ள தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஒரே நாளில் செய்யக் கூடியது அல்ல. அன்று இருந்த மண்வெட்டி, கடப்பாரை போன்ற  சிலக் கருவிகளைக்  கொண்டு ஆண்டுக் கணக்கில் செய்து வந்ததால் தான் இன்றும் காட்டுக்கு போய் வருகிறோம் என்ற சொல் கொங்கு மண்டலத்திலும் வெள்ளாள கவுண்டர்கள் உழவுத் தொழில் செய்யுமிடங்களிலும்  பேசப் பட்டு வருகின்றன. ஒரு குடும்பம் என்பது அக்காலத்தில் ஒரு பெற்றோருக்கு வழக்கமாக பத்து அல்லது அதற்கும் மேற்பட்டு குழந்தைகள் இருந்தன. அப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு இருபத்தைந்து  வயதானாலே திருமணப் பேச்சு தொடங்கி விடுவர். அதே போல் பெண்ணுக்கும் பதினாறு அல்லது பதினேழு வயதினிலேயே திருமணம் செய்து விடுவர்.அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவர்களும் பெற்றோர்களாகி பத்து அல்லது அதற்கும் மேல் பெற்றிருப்பர். அப்படி பார்க்கும்பொழுது ஒரு குடும்பத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் இருக்கும் பொழுது அதனை ஒரு குடும்பம் என்று சொல்வதை  விடக் கூட்டம் என்றுதான் சொல்ல முடியும்.  அந்தக் கூட்டத்திற்கு முதற்காரணமாக இருந்த தலைவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அனைவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால்தான் அக்கூட்டத்தின் முதல்வனாகியவரின் பெயரைக்  கொண்டு சில கூட்டங்களும் சில சிறப்புகள் கொண்ட கூட்டத்தினருக்கு அந்த சிறப்பு பெயர்களாலே கூட்டப் பெயர்கள் உண்டாயிற்று. மேலும் நமது கோயில்களை காணியாட்சிக் கோயில் என்றே கூறப்பட வேண்டும். நம் காணிகளை ஆட்சி செய்யும் கடவுளாக இருப்பதால் அப்பெயர் உண்டாயிற்று .சுமார் 50ஆண்டுகள் முன்னர் வரை நம் கோயில்களை அவ்வாறுதான் கூறி வந்தனர். 80 வயதுக்கு மேற்பட்ட நம் பெரியோர்களைக் கேட்டால் காணியாட்சி என்றே கூறி வந்ததை ஒப்புக் கொள்வர். ஆனால் என்ன காரணத்தாலோ புலவர் திரு ராசு அவர்கள் குலம் , குலக் கோயில் என்றே குறிப்பிட்டு வந்துள்ளார்.



        புலவர் திரு ராசு அவர்கள் தொகுத்துள்ள கூட்டங்களின் பெயர்களைக் கொண்டுதான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இக்கட்டுரையில் புலவர் திரு ராசு அவர்கள் குறிப்பிட்டுள்ள பெயர் காரணங்களையும் நான் குறிப்பிடும் பெயர் காரணங்களையும் ஒருங்கே கொடுத்து உள்ளேன்.   இரண்டையும் ஒப்பிட்டு  தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது கூட்டங்கள் ஆரியர்களின் வருகைக்கு  முன்னரே  உண்டானதால்  அவர்கள் மொழிப் பெயர்களில் வரும் கூட்டங்களைத் தவிர்த்துள்ளேன். 


கூட்டங்களின் பெயர்கள் 


1. அடகர் கூட்டம்  --  செப்பேடுகளில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாகக்  குறிப்பிடும் புலவர் திரு ராசு கூட்டத்தின் வரலாறு பற்றி யாரும்  குறிப்பிடவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.  அடகர் கூட்டம் அடகு கூட்டம் என்றும் அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான பெயர் எப்படி வந்தது என்று குறிப்பிடவில்லை.   


எனது விளக்கம் 


அடகம் என்பது மருவி மரியாதை நிமித்தமாக 'ஆர்' சேர்த்து  அடகர் என்றாகி இருக்கலாம். அடகம் என்பதற்கு வசம்பு என்று பொருள் உள்ளதாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது. எனவே  அதிகளவில் வசம்பு விளைந்த தோட்டத்தினருக்கு அடக கூட்டத்தினர் என்றழைக்கப் பட்டிருக்கலாம் . வசம்பு கூட்டத்தினர் என்றே பெயர் வழங்கப் பட்டிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். சங்க இலக்கியப் பாடல்களுக்கோ அல்லது திருக்குறளுக்கோ எல்லோராலும் பொருள் கூறி விட முடியாது. அக்காலத்தில் என்னப் பெயர் பொதுவாக கூறப்பட்டதோ அதைத்தான் அக்காலத்தில் குறிப்பிடுவர்.

 

2. அந்துவன் கூட்டம்  -- அந்துவன் என்பது ஒருவரின் பெயர் என்றும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் இப்பெயர் வந்துள்ளது என்று கூறுகிறார். ஒரே 

பெயர் கொண்ட பலர் இக்காலத்தில் இருப்பதைப் போல் அப்பொழுதும் இருந்துள்ளனர் என அறியலாம் 


எனது விளக்கம்


புலவர் திரு. ராசு சொன்னது போல் அந்துவன் என்ற தலைவனின் கீழ் வந்த சந்ததியினரே அந்துவன் கூட்டத்தினர் என அழைக்கப் படுவர்.


3. அழகு கூட்டம்  --   இக்கூட்டம் பற்றிய செப்பேடு , கல்வெட்டு போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை என புலவர் குறிப்பிட்டுள்ளார். திரு நல் நடராசன் 

என்பவர் இக்கூட்டம் பற்றி விரிவாக எழுதியுள்ளார் என்று புலவர் குறிப்பிட்டுள்ளார். வேளாண் தொழில் செய்பவர்களுக்கு ஏர் என்னும் கருவி அவசியம் என்பதை தமிழர்கள் நன்கு அறிந்ததால் அக்கருவிக்கு ஏர் எனப் பெயரிட்டு நாளடைவில் அழகு என்னும் பொருள் வழங்கப்பட்டது. மேலும் நெல்மனியையும்,  நெற்கதிர்களுடன் இதர தானியங்களின் கதிர்களையும் திவாகர நிகண்டு,  'அலகு'  என்று குறித்துள்ளது. திருவள்ளுவரும் 'அலகுடை நீழலவர் ' என்று குறித்துள்ளார். ஆகவே அலகு என்ற பெயரே பின்னர் ‘அழகு’ என்பதாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்.


எனது விளக்கம் 


புலவர் சொல்வது போல் எழுத்துப் பிழை ஏற்பட வாய்ப்புண்டு. ஏனென்றால் நமது கூட்டங்களில் பல எழுத்துப் பிழைகளுடன் உள்ளதால் பொருள் மாறியும், 

பொருள் அறிய முடியாமலும் உள்ளன. பின்னர் வரும் கூட்டப் பெயர்களைக் கூறும் பொழுது விளக்குகிறேன்.


4.அன்ன கூட்டம்  --  அன்னம் பறவையினங்களில் மிக உயர்ந்தது. பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் உட்கொள்ளும் 

ஆற்றல் உடையது என்று கூறுவர். அன்னப் பறவை இவர்களின் சின்னமாக இருக்கலாம் என்று புலவர் கூறுகிறார். ஆனால் விக்கிப்பீடியாவில் இது கற்பனைச் செய்தி என்றும் அதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கிறது,  அன்னப் பறவை  இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள்  பல ஏற்றிச்சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. அவற்றுக்கு அப்பண்பு கிடையாது என்று விக்கிப்பீடியா கூறுகிறது.



எனது விளக்கம் 


அன்னம் என்பதற்கு தமிழ் பேரகராதியில் ‘தங்கம்’ என்று பொருள் எனத் தெரிவிக்கின்றது. எனவே இக்கூட்டத்தினர் தங்கம் தொடர்பான வேலை  செய்பவர்களாக இருக்கலாம். அன்னம் என்பதற்கு சோறு என்று கூறுவர்.  ஆனால் அது வேற்று மொழிச் சொல்லாகும்.


5. ஆடர் கூட்டம்  --  ஆடர் கூட்டத்தை அலகுமலைக் குறவஞ்சியும், வேளாளர் குல கும்மியும் 'ஆடை கூட்டம்' என்றே குறிக்கின்றது.கொங்கு கூட்ட வரலாற்றை 

எழுதிய அனைவரும் ,போர் தொடர்பான சொல் என்றே எழுதிய்ள்ளதாகப் பதிவிடுகிறார். அதே சமயம் ஆடல் கலையில் வல்லவர் - ஆடர் - எனப்  பெயர் 

பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.



எனது விளக்கம் 


தமிழ் பேரகராதியில் ஆடம்  என்பதற்கு ஆமணக்கு என்று பொருள் உள்ளது. எனவே அதிக அளவில் ஆமணக்கு பயிரிட்டு வந்த கூட்டத்தினர் ஆக இருக்கலாம் அதனால் அக்கூட்டத்தினருக்கு அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். 



6. ஆதி கூட்டம்  --  திரு புலவர் ராசு அவர்காளின் கூற்றுப்படி ஆதி என்ற சொல்லுக்குஅதிசயம், இறைவன்,அருகதேவன்,சூரியன்,தொன்மை,பரமசிவன்,

பழமை ,முதல்,என்று பல சொற்கள் தமிழ் அகராதிகளில் உள்ளது.எனவே ஆதி என்ற சொல்  பல்வேறு இடங்களில் சிறப்பிக்கப்படுவதுடன் சிறப்பும், மேன்மையும்,முதன்மையும் பெற்ற சொல் என்று தெரிய வருவதாக கூறுகிறார்.



எனது விளக்கம் 


தமிழ் பேரகராதியின் படி அகுதி என்பது ஆதி எனத் திரிந்தது.  அகுதி என்பதற்கு பொருள் - முன் வந்தது, முதன்மையானது, எனப் பொருள்படும். எனவே 

அகுதி என்பதே கூட்டத்தின் பெயராக இருக்க வாய்ப்புண்டு. அகுதி என்பதற்கானப் பொருள் கீழ் உள்ள இணையவழித் தொடர்பில் உள்ளது.

https://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam012/images/ldpam012092.jpg



7. ஆந்தை கூட்டம்  --  திரு புலவர் ராசு அவர்கள் சங்க இலக்கியங்களிலும், குகை எழுத்துகளிலும்,அகழாய்வு பானை ஓடுகளிலும் ஆதன் என்ற சொல் மிகுதியாக வந்துள்ளது என்று தெரிவிக்கிறார். தொல்காப்பியர் ஆதன் என்னும் சொல் தந்தை என்ற சொல்லோடு சேரும்போது அவை 'ஆந்தை' என்று மாறும் என்று கூறுகிறார். எனவே புலவர் கருத்துப்படி 'ஆதன் தந்தை' என்ற கூட்ட முதல்வரால் ஆந்தை கூட்டம் பெயர் பெற்றிருக்கலாம் .




எனது விளக்கம்


தொல்பொருட்கள் ஆய்வில் பல பொருட்களில் ஆதன் எனப் பெயர் காணப் படுவதாகக் கூறப்படுகிறது. இதில் யாருடைய தந்தையை சேர்த்து 'ஆந்தை' எனச் சொல்ல வேண்டும். ஆதன் தந்தைக்கும் பெயர் இருந்திருக்க வேண்டுமல்லவா? அவர்தானே கூட்டத் தலைவர் என நாம் ஏற்றுக் கொள்ள முடியும் . நான் ஏற்கெனவே கூறியபடி காட்டை முழுவதும் அழிக்க இயலாது. உழவுத் தொழில் செய்ய எவ்வளவு நிலம் தேவையோ அவற்றை மட்டும் அழித்து வயலாக்கி வேளாண்மை செய்து வந்துள்ளனர். வயல்களை ஒட்டிய காடுகளில் பல வகையான மரங்கள் இருந்திருக்க வேண்டும். அவைகளில் பறவைகள் கூடு கட்டி வசித்து வந்திருக்க வேண்டும். அப்படி இருந்த நிறைய மரங்களில்  ஆந்தைகள் கூடுகட்டி வாழ்ந்திருக்க வேண்டும். ஆதலால் அந்நிலத்து கூட்டத்தினரை குறிப்பதற்கு ஆந்தை கூட்டத்தினர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  திரு டி. எம்.காளியப்பா, திரு.கு. சேதுராமன் போன்ற அறிஞர்கள் ஆந்தை என்ற பறவையின் பெயரால் இக்கூட்டம் பெயர் பெற்றது என்பர்.



8. ஆவன் கூட்டம்  --  புலவர்  திரு ராசு அவர்கள் திரு கு. சேதுராமன் அவர்கள் ஆவணம் என்ற சொல்லிலிருந்து இக்கூட்டப் பெயர் தோன்றியிருக்கலாம் என்று 

கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஆவணம் எழுதியோர் வழி வந்தவர்கள் ஆவன் கூட்டத்தார் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறுகிறார். மற்ற 

அனைவரும் பசுவைக் குறிக்கும் 'ஆ' என்ற சொல்லிலிருந்து இக்கூட்டப் பெயர் தோன்றியிருக்கலாம் என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.



எனது விளக்கம் 


தமிழ் பேரகராதியில் ‘ஆவன்’ என்ற பெயரே இல்லை. எனவே ஏதாவது ஒருச் சொல் மருவி இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். பசுக்களின் காரணமாக இப்பெயர் 

ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து. காரணம் நிறைய பசுக்களை வளர்ப்பது என்பது எல்லாக் கூட்டத்தினரிடையும் அப்பழக்கம் அக்காலத்தில் இருந்தது. ஒருவருடைய செல்வ நிலையை அவரிடம் உள்ள கால்நடைகளைக் கொண்டே அக்காலத்தில் மதிப்பிட்டனர். பகைவர்கள் ஆநிரை கவர்தல் என்பதை சங்க இலக்கியங்களில் படித்துள்ளோம். ஏன் என்றால் அதுவே பெருஞ் செல்வமாகும். அனைத்துக் கூட்டத்தினரும் பசுக்களை அக்காலத்தில் வைத்திருக்கக் கூடும். எனவே புலவர் முதலில் குறிப்பிட்டபடி திரு. கு.சேதுராமன் அவர்கள் குறிப்பிட்ட ஆவணம் என்றச் சொல்லிலிருந்து 

இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.


9. ஈஞ்சன் கூட்டம்  --  புலவர் திரு. ராசு அவர்கள் ஈஞ்சன் என்ற இயற் பெயர் கொண்ட ஒருவர் கால்வழி தோன்றிய சந்ததியார் தம்மை ஈஞ்சன் கூட்டத்தார் என்று அழைத்துக் கொண்டனர் என்பது ஒரு கருத்து என்கிறார். திரு டி. எம். காளியப்பா அவர்கள் இக்கூட்டப் பெயர் ஈஞ்ச மரத்தின் பெயரால் ஏற்பட்டது என்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். 



எனது விளக்கம் 


நான் ஏற்கெனவே கூறியபடி காட்டை அழித்து நம் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர் என்றும் முழுக் காட்டையும் அழிக்க இயலாது என்பதால் வயல்களை 

ஒட்டி பலவகை மரங்கள் இருந்திருக்க வேண்டும். அதில் பலவகையான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்திருக்கும்.  அப்படிப்பட்ட மரவகைகளில் ஈஞ்ச மரங்கள் நிறைய இருந்திருக்கலாம்..திரு டி. எம். காளியப்பா அவர்கள் குறிப்பிட்டது போல் ஈஞ்சன் கூட்டத்தினர் அம்மரங்கள் அடர்ந்துள்ள இடங்களில் வேளாண்மை செய்து வந்ததால் அவர்களை அடையாளப் படுத்துவதற்காக ஈஞ்சன் கூட்டத்தினர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.



10. உத்தமர் கூட்டம்  –  திரு. புலவர் ராசு அவர்கள் கொங்கு வேளாளர் உத்தமன் அல்லது உத்தமர் கூட்டம் பற்றிய குறிப்பு 96 புகழ் பாடல்களிலும் வேளாளர் கும்மியிலும், கல்வெட்டுகளிலும் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். உத்தமன் என்ற சொல்லுக்கு நற்குணம் உடையவன், சிறந்தவன் ஏன்று அகராதியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். 



எனது விளக்கம் 


புலவர் அவர்கள் குறிப்பிட்டது சரியே. உத்தமன் என்றால் நல்லவன் என்று இன்றும் சொல்வழக்கில் உள்ளது.. 



11.எண்ணை கூட்டம் – புலவர் அவர்கள் திரு டி. எம். காளியப்பா அவர்கள் எண்ணை மரத்தின் பெயரால் எண்ணை கூட்டம் எனப் பெயர் பெற்றது என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்.திரு.கு. சேதுராமன் ‘வென்ற கூட்டம்’ என்பது மருவி வென்ன கூட்டம் என்றாகி பின்பு எண்ண கூட்டம் என்றாகி விட்டதாகவும், திரு.நல்.நடராசனும், திரு. இரா. இரவிக்குமாரும் அரசனுக்கு ஆலோசனை கூற “எண்ணர்” என்பார் இருந்ததாகவும் அமைச்சருக்கு நிகரான அவர்கள் வழி வந்தவர்கள் எண்ண கூட்டத்தினர் ஆயினர் என்று குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார். 


எனது விளக்கம்  


அரசவையில் அரசனுக்கு எண்ணி ஆராய்ந்து சொல்பவர்களுக்கு எண்ணர் என்று பெயர். அரசனுக்கு அறிவுரை சொல்லும் இவர்களுக்கு அமைச்சர் ஆவதற்கு முன்பு என்ன கூட்டத்தினர் ஆக இருந்திருப்பார்? எனவே திரு டி. எம். காளியப்பா அவர்கள் கூறியது போல் எண்ணை மரத்தின் மூலம் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதே என் கருத்துமாகும். ஏன் என்றால் எண்ணெய் வடியும் மரங்கள் - மலபார் எண்ணெய் மரம் என்று உண்டு. அம்மரங்கள் நிறைந்த பகுதிகளில் வேளாண்மை செய்து வந்தவர்களைக் குறிப்பிடும் வகையில் எண்ணெய் கூட்டத்தினர் என்ற பெயர் ஏற்பட்டு பின்பு எண்ண கூட்டத்தினர் என மருவி இருக்கலாம்.


12. ஒழுக்கர் கூட்டம்  —   புலவர் அவர்கள் திரு. டி. எம். காளியப்பா அவர்களும்,திரு.தே. பா. சின்னசாமி அவர்களும் இக்கூட்டத்தினருக்கு பண்பும், ஒழுக்கமும் கொண்டவர்கள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்று கூறியுள்ளனர் என்று தெரிவிக்கிறார்.’ உழு’ என்ற சொல்லின் அடிப்படையில் இக்கூட்டப் பெயர் தோன்றியதாக திரு.நல். நடராசன், திரு.மோகனசுந்தரம், திரு.இரா. இரவிகுமார் போன்றவர்கள் கூறுவதாக புலவர் குறிப்பிட்டுள்ளார்.



எனது விளக்கம் 



பெயரைக் கொண்டே அறியலாம் இக்கூட்டத்தாரின் பெயர் காரணத்தை. திரு. டி. எம். காளியப்பா அவர்களும், திரு. தே.பா. சின்னசாமி அவர்களும் கூறியது போல் இவர்களின் ஒழுக்கத்தையும், பண்பையும் கொண்டே இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.



13. ஓதாளார் கூட்டம்  –   புலவர்.திரு. ராசு அவர்கள், திரு. டி. எம். காளியப்பா அவர்கள் ஓதி + ஆளன் என்று பிரித்து நாடாளும் நுட்பத்தை அரசருக்கு ஓதி ஆட்சி புரிகின்றவர், ‘ஓதாளர்’ என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஓதாளன் என்பது ஒரு இயற்பெயர் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் அமராவதி ஆற்று மணலில் பலந்தமிழில் ‘ஓதாலன்’ என்று பொறிக்கப்பட்ட மோதிரமொன்று கிடைத்துள்ளதைக் குறிபிடுகிறார். அதனால் ஓதாளன் என்ற இயற்பெயர் கொண்டவர் வழிவந்தவர்களே ஓதாளர் கூட்டத்தினர் ஆவர் என்று கூறுகிறார்.


 


எனது விளக்கம் 

  

ஐயா புலவர் திரு ராசு அவர்கள் சாட்சியுடன் கூறியதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன்.




14.கண்ணந்தை கூட்டம்  –  கண்ணன் என்ற கூட்டமும், நாட்டார் கண்ணன் கூட்டமும், கன்னந்தை என்ற கூட்டமும் முன்பு ஒரே கூட்டமாக இருந்து மூன்று கூட்டமாகப் பிரிந்தது என கண்ண கூட்டம் கன்னிவாடி கூட்டப் பட்டயம் கூறுவதாக கூறியுள்ளார்.வன்னிய சமூகத்தாருடன் கருத்து வேறுபாடு உண்டாகி வடக்கே வந்த கண்ணர்கள் அமராவதி ஆற்றைக் கடக்கும்போது ஆற்று நீர் பெருகி வருவதைக் கண்ட மக்கள் திகைக்கும்போது சூது போட்ட நல்லம்மாள் என்ற பெண் தாயே கங்கா பவானி எங்களை பள்ளி வேளாளனுக்கு ஒப்பு வைக்கிரதானால் நீயே ஒப்புக் கொள்ளு.இல்லையென்றால் சிறு குழந்தையின் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வற்றிப் பின் நாங்கள் ஆற்றைக் கடந்த பின் நீர் பெருக வேண்டும்.என்று ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள வாழவந்தானூர் வந்து சேர்ந்த பின் மக்கள் அனைவரும் வந்து சேர்ந்தனரா என்று திரும்பிப் பார்க்கையில் ஆடை நனையாமல் வந்தவர்கள் நாட்டார் என்றும்,ஆடை நனைந்து வந்தவர்களை ஆதிகண்ணன் என்றும், முழுதும் நனைந்து வந்தவர்கள் ஆதி கன்னந்தை என்றும் மூன்று கூட்டமாகப் பிரிந்து ,அவரவர்கள் விருப்பபடி போனார்கள் என்பது கன்னிவாடி பட்டயத் தொடர்களாகும் எனப் புலவர் குறிப்பிட்டுள்ளார். 


எனது விளக்கம் 


திரு டி. எம். காளியப்பா அவர்கள் “கண்ணன் கூட்டத்தார் “ கிளைக் கூட்டம் கன்னந்தைக் கூட்டம் என்றும் , திரு நல். நடராசன் அவர்கள் கன்னனிலிருந்து அறுந்த கூட்டம் கண்ணந்தை கூட்டம் என்றும், திரு கு. சேதுராமன் கண்ணன் கூட்டமும் ஆந்தை கூட்டமும் சேர்ந்து கண்ணந்தை கூட்டம்  ஏற்பட்டது என்று கூறுகின்றனர். திரு தே. ப. சின்னசாமி தன நூலில் கன்னந்தைக் கூட்டத்தையே குறிப்பிடாமல் விட்டு விட்டார். ஏன் என்றால் பட்டயம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் இதில் நம்பும்படியானவை இல்லை. திருமதி நல்லம்மாள் சூது போட்டு நாங்கள் அக்கரை சேர்ந்த பின்னர் நீர் பெருக வேண்டும் என்று வேண்டியதற்கு இணங்கிய அமராவதி ஆறு சில பேர் கடந்தபின் நீர் பெருகக் காரணம் என்ன? மூன்று கூட்டங்களாகப் பிரிய வேண்டிய அவசியம் என்ன? ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே அனைவரும் இதில் ஆடை நனைந்ததால் வேறு கூட்டங்களாகப் பிரிய வேண்டிய அவசியம் என்ன? பிற்காலத்தில் மூன்று கூட்டங்களாகப் பிரிந்ததால் திருமண உறவு முறை கொள்ள வாய்ப்பு ஏற்படுமா ஏற்படாதா என்பதை சிந்திக்கக் கூட நேரம் இல்லாமல் பிரிய வேண்டிய கட்டாயம் என்ன? இதனால்தான் திரு சின்னசாமி தனது நூலில் குறிப்பிடாமல் விட்டு விட்டார் போலும்.




15.  கண்ணன் கூட்டம்  -   புலவர் திரு ராசு அவர்களின் கூற்றுப்படி கண்ணன் என்பது தொன்மையான பெயர். இக்கூட்டத்தை திரு டி எம். காளியப்பா அவர்கள் கன்ன கூட்டம் என்றும் அழைக்கலாம் என்றும் கூறுகிறார். துவாரகையை ஆண்ட கிருஷ்ணன் என்னும் கண்ணன் இக்கூட்டத்தில் தோன்றியவனே என்று திரு.இரா. இரவிக்குமார் அவர்கள் கூறுகிறார்.திரு. வி. இராமமூர்த்தி அவர்கள் ‘ கண்ணவர் ‘ என்ற சொல்லுக்கு அமைச்சர் என்று பொருள். முன்பு வேளாளர்கள் சிலர் அரசர்களிடம் அமைச்சர்களாக பணி செய்திருக்கலாம். எனவே கண்ணவர் வழி வந்தவர்கள் கண்ண கூட்டத்தார் எனப்பட்டனர் என்று கூறுகிறார். 



எனது விளக்கம் 


கண் என்பது வழமையான பெயர். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளனர். தொல்காப்பியத்தில் தமிழர் வணங்கும் தெய்வங்களாக மாயோன், சேயோன் ஆகிய தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆரியர் வருகைக்கு பின்னர்தான் மாயோனை கண்ணன் எனப் பெயரிட்டு வழங்கி வந்துள்ளனர். கண்ணன் என்ற பெயர் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ளது என்றும், எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள குவாசிர்-அல்-காதிம் என்ற ஊரில் செய்த அகழாய்வில் ‘கண்ணன்’ என்று தமிழில் எழுதப்பட்ட ஓடு கிடைத்துள்ளதாக புலவர் அவர்கள் குறிப்பிடுகிறார். எனவே கண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட தலைவனின் வழிவந்தவர்கள் கண்ணன் கூட்டத்தினர் எனக் கொள்ளலாம் என்பது என் கருத்து. நான் முன்பு எழுதிய நூலான “வெள்ளாள கவுண்டர்கள் அறிய வேண்டியவை” என்பதில் கரும்புக்கு கன்னல் என்றும் ஒரு பெயர் உள்ளது. எனவே கரும்புப் பயிர் செய்து வந்தவர்கள் கன்னல் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அகழாய்வில் கண்ணன் என்ற பெயர் கிடைத்துள்ளதை அண்மையில் அறிந்ததால் நான் திருத்திக் கொள்கிறேன். நம் இன வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் யாரும் சரியாகக் குறிப்பிட இயலாது. என்பதையும் அனுமானமாகத்தான் குறிப்பிட இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



16. கணக்கன் கூட்டம்  -   கணக்கர்களாகப் பணி புரிந்தவர்களின் வழிவந்தவர்கள் தங்களைக் கணக்கன் கூட்டத்தார் என்று அழைத்துக் கொண்டிருக்கலாம் என்று புலவர் அவர்கள் கூறுகிறார். மேலும் வேளாண் தொழிலை விட்டுவிட்டு கணக்கு வேலை பார்த்து வாழ்வது நல்லது என்ற மனோபாவம் கொண்ட வேளாளர் சிலர் பாளையக்காரர்,மிட்டாமிராசு மணியக்காரரிடம் கணக்கராகப் பணியாற்றினார்.அவர்கள் நாளடைவில் ஒரு தனிக் கூட்டமாக அழைக்கப்பட்டனர் என ஆய்வாளர் ஒருவர் எழுதியுள்ளதாகக் கூறுகிறார்.



எனது விளக்கம் 


தங்கள் கூட்டத்தினரிடையே ஒவ்வொன்றுக்கும் கணக்கு பார்ப்பதும் அண்டை நிலத்தாரிடமும் ஒவ்வொன்றுக்கும் கணக்கு பார்ப்பது (கறாராக இருப்பது)  போன்றவற்றால் அக்கூட்டத்தின் தலைவனுக்கு கணக்கன் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து பாளையக்காரர், மிட்டாமிராசிடம் பணி செய்து வந்ததால் தனிக் கூட்டம் உண்டானது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு கூட்டம் என்றால் குறைந்தது நாற்பது முதல் அறுபது ஆண்கள் மட்டுமே இருப்பர். இவ்வளவு பேருக்கும் கணக்கு பார்க்கும் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் வேளாண் தொழில் வேண்டாம் என்று வேறு வேலைக்கு சென்று விட்டால் இவர்களுக்கு காணி இருந்தால்தானே காணியாட்சி தெய்வம் என்று ஒன்று இருக்க முடியும்.



17. கணவாளர் கூட்டம்  -  கனமான வாள் ஏந்திப் போரில் போராடி வெற்றி பெற்ற வேளாளர் வழி வந்தவர்கள் கணவாளர் கூட்டத்தினர் ஆயினர்.அல்லது கனமான வாழ்வு ,எல்லோரும் போற்றிப் புகழும் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் கணவாளர் கூட்டத்தினர் என்றழைக்கப் பட்டனர் என்று திரு டி. எம். காளியப்பா அவர்கள் கூறியுள்ளார். ‘ கணம் ‘ என்றால் கூட்டம், குழு , திரண்டோர் என்ற பொருள் உண்டு.கோயில்களில் நிர்வாகம் செய்யும் மக்கள் கணப் பெருமக்கள் என அழைக்கப் பெறுகின்றனர்.திருச்செங்கோட்டில் திருவாதிரைக் கண பெருமக்கள்,துவாதசி கணப் பெரு மக்கள் என்ற குழுவினர் அந்தந்த விழாவைக் கொண்டாடினர்.எனவே கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்தவர்கள் கணவாளர் கூட்டத்தினர் எனப் பட்டனர் என்ற கருத்தில் திரு.நல். நடராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.




எனது விளக்கம் 


கனமான வாள் ஏந்திப் போரில் ஈடுபட்டு  வெற்றிப் பெற்றதாலோ அல்லது கனமான வாழ்வு, எல்லோரும் போற்றிப் புகழும் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் கணவாளர் கூட்டத்தினர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று திரு.டி. எம். காளியப்பா அவர்கள் கூறியதில் ஒரு முரண்பாடு உள்ளது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவர்களிடையே போர் ஏற்பட்டது என்றால் அப்போரின் முன்னமே அக்கூட்டத்திற்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமல்லவா? தமிழ் பேரகராதியின் விளக்கத்தின்படி   [கணம் (கூட்டம்) +ஆளம் =கணவாளம். : கூட்டம், ஒற்றுமை ,  ஆளம் - ஆளுந்தன்மை கணவாளம் -  கூடி வாழும் ஒற்றுமையைப் பேணிக் காக்கும் கூட்டத்தார் ]   என்றுள்ளது. இதுவே எனக்கு சரியான விளக்கமாகப் படுகிறது.



18. கல்லி கூட்டம்  -  கொடுமணல் இலக்கியத்தில் ‘ கல்லி ‘ என்றும், வேளாளர் குலக்கும்மியில் ’ கல்லியன் ‘ என்றும் இக்கூட்டம் குறிக்கப்படுகிறது என்று புலவர் திரு. ராசு அவர்கள் குறிப்பிடுகிறார். 


எனது விளக்கம் 


கல்லி என்றால் தமிழ் பேரகராதியில் ‘பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அத்தகு நுண்ணறிவு கொண்ட தலைவனின் வழிவந்தவர்கள் எனக் கொள்ளலாம்.



19.  கழஞ்சியர் கூட்டம்  -  ஓதாளர் அலகு மலைக் குறவஞ்சியில் களிஞ்சி என்றும் , வேளாளர் 96 பாடல்களில் ‘ களஞ்சியர் ‘ என்றும் குறிக்கப் பெரும்,கொங்கு வேளாளர் கூட்டக் கல்வெட்டுகள் .கழஞ்சியர் கூட்டம்’ என்று குறிப்பதாக எழுதியுள்ளார்.



எனது விளக்கம் 


கழஞ்சியர் என்பது தங்கத்தை (1.77 கிராம்எடையுள்ள) அளவைக் குறிப்பவர் என்று தமிழ் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தங்கத்தின் அளவை மதிப்பிடுபவர் வழியில் வந்தக் கூட்டத்தினர் கழஞ்சியர்க் கூட்டத்தினர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. 



20. காடை கூட்டம்  -  கொங்கு வேளாளர் கூட்டங்களில் முதன்மை வாய்ந்த சில கூட்டங்களுள் காடை கூட்டமும் ஒன்று. இச்சிறப்பு மிக்க கூட்டத்தைக் காடை, காடன், காடர், காடான் எனப் பலவாறு அழைப்பர் என்கிறார் புலவர் திரு. ராசு. மேலும் அக்கூட்டத்தின் பெயர் பற்றிப் பலர் பலவாறு கருத்துகள் கூறியுள்ளனர். பேராசிரியர் கா. அரங்கசாமி  ‘ காடு கெடுத்து நாடு ஆக்கிய கூட்டம் காட கூட்டம் ‘ என்று எழுதியுள்ளதாக புலவர் கூறுகிறார். காடு கெடுத்து நாடு உண்டாக்கிய தன்மை கொங்கு வேளாளர் அனைவருக்கும் பொருந்தும்.இக்காரணம் பற்றிப் பெயர் வந்திருந்தால் ‘ காட்டுக் கூட்டம் ‘ என்று ஆகியிருக்கும் எனப் புலவர் கூறுகிறார். 



எனது விளக்கம் 


காடு அழித்து வயல்கள் ஏற்படுத்திய பின் அருகில் உள்ள காட்டு மரங்களில் காடைகள் கூடு கட்டி வாழ்ந்திருக்க வேண்டும். எனவே இவர்களை அடையாளப்படுத்த காடைகள் வாழும் காட்டு கூட்டத்தினர் என்று கூறி வந்ததால் இவர்களுக்கு காடை கூட்டத்தினர் எனப் பெயர் ஏற்பட்டிருக்கும் என்பது என் கருத்து.



21. காரிகூட்டம்   -   காரி என்பது தொன்மையான ஒரு தமிழ்ப் பெயர் எனத் திரு. புலவர் ராசு அவர்கள் கூறுகிறார். சங்ககால ஏழு வள்ளல் பெருமக்களில் காரி ஒருவர். காரியைக் கபிலர், பெருஞ்சித்தனார், கோவூர் கிழார், கல்லாடனார், போன்ற புலவர்கள் பாடியுள்ளனர். இதில் கபிலர் பிராமனர் ஆவார். எனவே அவர் சிவந்த நிறமுடையவர். ஒரு எழுத்தாளர் காரி என்றால் கருமை அல்லது சாம்பல் நிறமுடைய எருதுக்குப் பெயரென்று கூறி எருதோடு இக்கூட்டத்தைத் தொடர்பு படுத்துகிறார்.


எனது விளக்கம் 


புலவர் அவர்கள் சங்க கால ஏழு வள்ளல் பெருமக்களில் காரி என்று ஒருவர் இருந்ததாகவும், அவரைக் கபிலர் என்னும் பிராமணர் போன்றோர் பாடியுள்ளதாகவும் கூறுகின்றார். இவையெல்லாம் நாம் கூட்டமாக கூடி வாழ்ந்து வேளாண்மை செய்த காலத்திற்கும் ஆரியர் வருகைக்கும் மிகவும் பிந்தியது, ஒரு எழுத்தாளர் கருமை நிறமுடைய எருதின் நிறத்தோடு தொடர்பு படுத்தி கூறுகின்றார் என்று புலவர் அவர்கள் கூறியுள்ளார். இது ஏற்கக் கூடிய ஒன்றாக எனக்குப் படுகிறது. எப்படியென்றால் அக்காலத்தில் கால்நடைகளைப் பெருமளவில் எல்லாக் கூட்டத்தினரும் வளர்த்து வந்துள்ளனர். அவைகளில் பெரும்பான்மையான கால்நடைகள் கருமை நிறத்தில் இருந்தக் கூட்டத்தினரை காரிக் கூட்டத்தினர் எனப் பெயரிட்டு இருக்கலாம் என்பது என் கருத்து. 



22.  கீரை கூட்டம்  -  புலவர் திரு . ராசு அவர்கள் கீரன் கூட்டம் - கீர கூட்டம் - கீரை கூட்டம் என்று பெயர் மருவி இருக்கலாம் என்று எழுதியுள்ளார்.சங்க இலக்கியங்களில் இளங்கீரன், கழார்க்கீரன், கீரன் கண்ணன்,கீரன் கீரனார்,போன்ற இன்னும் பல பெயர்களைக் காணலாம் என்று கூறுகின்றார்.நாமக்கல் மாவட்டம் புகலூர் அருகேயுள்ள ஆறு நாட்டார் மலையில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டுகளில் ,    “நாகன் மகன் பெருங்கீரன்”

     “கீரன் கொற்றி செய்வித்த அதிட்டானம்”

      “கீரன் கொற்றி செய்வித்த பாளி”

என்ற செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்று கூறுகிறார்.



எனது விளக்கம்    


புலவர் திரு. ராசு அவர்கள் கூறியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் பல தமிழ்ச் சொற்கள் மருவி வேறு பெயரில் புழங்குவதுடன் வேறு பொருள்களையும் கொடுக்கின்றன என்பது கண்கூடு.


23.  குண்டெலி கூட்டம்  - கொங்கு வெள்ளாளர்களின் கூட்டங்களில் இக்கூட்டமும் ஒன்று. இக்கூட்டத்தார் செய்த திருப்பணிகள் தொடர்பாக ஆறு கல்வெட்டுகள் குறுப்பு நாட்டு ஆதியூர் ஆதிசுவரர் கோயிலில் கிடைத்துள்ளன.அக்கல்வெட்டுகளில் தெளிவாக ‘ ஆதவூர் வெள்ளாளன் குண்டெலிகளில்  ‘ என்று கூறப்பட்டுள்ளது.இக்கூட்டம் அலகுமலைக் குறவஞ்சியிலும், வேளாளர் குலக் கும்மியிலும் “ குண்டலி “ என்று கூறப்படுகிறது.



எனது விளக்கம் 


குண்டலி என்பதற்கு பேரகராதியில் ‘ தொப்புள் ‘ என்று பொருள் உள்ளது. பொதுவாக இக்காலத்திலும் நாம் ஒவ்வொருவர் உறுப்பை கொண்டு கேலியாக பெயர் வைத்து அழைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக உயரம் குறைவாக இருப்பவர்களை குள்ளன் என்றோ கூளையன் என்றோ அழைப்பதுண்டு. இதுபோல் பல எடுத்துக் காட்டுகள் கூறலாம்.பாட்டியல் நீளும் என்பது கருதி இந்த ஒன்றுடன் நிறுத்தி விடுகிறேன். அதேபோல் இக்கூட்டத் தலைவனுக்கு தொப்புள் சற்று வேறுபாடாக இருந்திருக்கலாம். இப்பொழுதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை அறிவோம். ஆகவே இக்கூட்டத் தலைவனுக்கு குண்டலி என்ற பெயர் ஏற்பட்டு அவர் வழிவந்தவர்கள் குண்டலி கூட்டம் என்பது மருவி குண்டெலி கூட்டம் என்று பெயர் உண்டாகியிருக்கலாம். 



24.  குழாயர் கூட்டம்  -  குழாயர், குளாயர் என்ற பெயர்களில் குறிப்பிடப் படுவதால் நீர்ப்பாசனம், நீர்ப் போக்குவரத்துக்கு பயன்படும் குழாயைக் கண்டு பிடித்தவராகவோ, அதிகம் செய்து கொடுப்பவராகவோ,இருப்பவராக இருக்க வாய்ப்புண்டு என்று புலவர் குறிப்பிடுகிறார். அதே சமயம் , மன்னர், படைத் தலைவர் முதலிய சமுதாயத்தின் முக்கிய ஆட்கள் காதில் அணியும் நகை குழை எனப்படும்.குழையணிந்தவன் கால்வழித் தோன்றிய மக்களுக்கு குழாயர் என்ற பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை முதலில் கூறியவர் திரு. க. பழனிசாமி புலவர். பின்னர் எழுதிய திரு. டி. எம். காளியப்பா முதலிய சிலரும் அதனை வழி மொழிந்தனர்.திரு. க. பழனிசாமிப் புலவர் தம் கருத்திற்கு ஏற்ப குழையர் கூட்டம் என்றே குறிப்பர்..அலகுமலைக் குறவஞ்சி நூலில் சில இடங்களில் ‘குழையர்’ எனக் கூறப்பட்டாலும் மற்ற இலக்கியம் , செப்பேடு,கல்வெட்டுகளில் ‘ குழாயர் ‘ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.அதனால் குழாயர் என்பதே இக்கூட்டத்தினரின் பெயர் என்பது உருதியாகின்றது



எனது விளக்கம்


குண்டலம் அல்லது குழை என்பது அக்காலத்தில் அனைத்துக் கூட்டத்தினரும்  காதில் அணியும் அணிகலன் ஒன்றாகும். எனவே குழையர் என்ற பெயர் இக்கூட்டத்திற்கு பொருந்தாது.எனவே புலவர் திரு. ராசு அவர்கள் உறுதிப்படுத்திய குழாயர் என்ற பெயரே சரி என ஒப்புக் கொள்கிறேன்.



25.  கூறை கூட்டம்  -   கூறை என்பது புதுப் புடவையையும் ஆடையையும் குறிக்கும் என்றும், தீபாவளியன்று அனைவருக்கும் கூறை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் வேளாளர்கள் கூறை கூட்டத்தினர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று புலவர் திரு. ராசு குறிப்பிடுகின்றார். கொங்கு மண்டல சதகத்தில் கூறை கூட்ட குழந்தை முத்தன் என்பவன் தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் கொடுத்தார் என்று கூறப்படுவதாகக் கூறியுள்ளார். 



எனது விளக்கம்  


கூறை கூட்டம் என்பது ஆடை நெய்பவர்கள் என்று பொருள். திருமணத்தின் போது மணமகளுக்கு கூறைப்புடவை எடுத்தாயிற்றா என்று கேட்பது வழக்கம். புத்தாடை என்பது பிற்காலத்தில் வழங்கப்பட்டச் சொல்லாக இருக்கலாம். ஆனால் திருமணத்தின்போது மணமகளுக்கு கூறைப்புடவை பற்றி இன்றும் கூறி வருவதால் அச்சொல் நிலைத்துள்ளது. இங்கு புலவர் திரு. ராசு அவர்கள் தீபாவளியன்று அனைவருக்கும் கூறை வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள் வேளாளர்கள் என்று கூறியுள்ளார். தீபாவளி என்ற விழாவே விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்திற்கு அறிமுகமானது. அதற்கு முன்னர் இங்கு அவ்விழாவைப் பற்றி யாருக்கும் தெரியாது. கேரளாவில் தீபாவளி கொண்டாடப் படுவதில்லை, ஏன் என்றால் அங்கு தெலுங்கர்கள் ஆட்சி செய்யவில்லை. நமக்கு இங்கு பொங்கல் திருவிழா எவ்வளவு முக்கியமோ அதுபோல் கேரள மக்களுக்கு ஓனம்தான் முக்கியம். 


 

26. கொற்றன் கூட்டம் -  இக்கூட்டம் பற்றி இடிகரை வில்லீசுவரமுடையார் கோயிலில் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமே உள்ள கல்வெட்டில் இப்பெயர் காணப்படுகிறது.அக்கல்வெட்டில் சித்திரமேழி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ‘ சித்திரமேழி ’ என்பது வேளாளர் சபை ஆகும் என்று புலவர் குறிப்பிடுகிறார். 

‘ கொற்றன் ‘ என்ற சொல்லுக்கு வெற்றி பெற்றவன், வீரமுடையவன்,அரசன், வீரன், என்று பல பொருள்கள் உண்டு. 



எனது விளக்கம் 


புலவர் ஐயா கொற்றன் என்ற சொல்லுக்கு பொருள் சொல்வது முற்றிலும் சரியே. அக்காலத்தில் அக்கூட்டத்தின் தலைவன் வீரம் மிக்கவனாகவும் எதிர்த்தவர்களை அடக்கி ஆண்டவனாக இருந்திருக்க வேண்டும் என்பதால் அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.



27. கோட்டாறு கூட்டம்  -  அலகுமலைக் குறவஞ்சி, கொடுமணல் இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் கோட்டாறு கூட்டம் எனக் குறிக்கப்பட்டுள்ளதாக புலவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.தே. ப. சின்னசாமி கொட்டாரர் - கொட்டாறு எனக் கொண்டு ‘ஒரே இடத்தில் பயிர் செய்யாது கொட்டாரம் குடிசை அமைத்து ஆங்காங்கே பயிர் செய்பவர்கள் ‘ கொட்டாரர் கூட்டத்தினர் ‘ என்று அவர் கூறியுள்ளதாக புலவர் குறிப்பிட்டுள்ளார்.

   

     பால வேளாளரிலும் கோட்டாறு குலம் உண்டு என்று புலவர் கூறுகிறார். 


எனது விளக்கம் 


திரு தே. ப. சின்னசாமி அவர்கள் கொட்டாரர் - கொட்டாறு என இரு பெயர்களை இக்கூட்டத்திற்கு கூறியிருப்பதன் காரணம் சொல் மருவி பெயர் மாறியிருக்கலாம் என்பதாக இருக்கலாம். அதே போல் இச்சொல் கொட்டாரம் அல்லது கோட்டாரம் எனப் பெயர் கொண்டிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் பேரகராதியில் இவ்விருப் பெயர்களுக்கும், அரண்மனை, யானைக் கட்டும் இடம், நெல் போன்ற தானியங்களைக் குத்தும் இடம் என்ற பொருள்கள்தான் கூறப்படுகிறது. பொதுவாக அனைத்துக் கூட்டத்தினரும் தானியங்களைக் குத்துவதற்கு அவரவரிடங்களிலேயே இடம் வைத்திருப்பார். யானைக் கட்டும் இடம் என்றால் வசதி மிக்கவர்களால்தான் யானை வைத்து அதற்கு உணவளிக்க முடியும். இவற்றைக் கணக்கில் கொண்டால் அரண்மனை போன்ற இடத்தில் வசித்தவர்களை கொட்டாரம் கூட்டத்தினர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.



28. கோவேந்தர் கூட்டம் - கோ, வேந்தர், என்ற இரு சொற்களும் அரசர் என்ற பொருளைக் குறிக்கும்  என்றும் ராசராசன், மன்னர் மன்னன் என்பதைப் போல கோவேந்தர் என்ற சொற்கள் அமைந்துள்ளதாகவும்,இக்கூட்டம் கோவேந்திரர் என்றும் குறிக்கப்பட்டுள்ளதாகவும், ‘ கோ- இந்திரர் ‘ என்றும் பிரிக்கலாம் என்று புலவர் குறிப்பிடுகிறார்.கு. சேதுராமன்,’ அரசர் பரம்பரையைப் போல் தகுதி மிக்கவர்கள் ‘ என்று கூறியுள்ளதாகவும், நாடாளும் தகுதி பெற்றவர்கள் கோவேந்தர் கூட்டத்தார் என்று திரு டி. எம். காளியப்பா அவர்கள் கூறுவதாகவும் புலவர் அவர்கள் கூறுகின்றார்.



எனது விளக்கம் 


கோ என்றாலும் வேந்தர் என்றாலும் அரசர் என்ற பொருளையே குறிக்கும். நாடு உண்டாகி, அரசுமுறை ஏற்பட்ட காலத்திற்கு முன்பே நாம் கூட்டம் கூட்டமாக வாழும் காலத்தில் கூட்டத்தினரிடையே ஏதாவது பிரச்சினை அல்லது காட்டு விலங்குகளால் தொல்லை ஏற்பட்டால் அதை தீர்ப்பதும் இவர்களின் ஒரு கடமையாக இருந்து இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். புலவர் அவர்கள் அரசர்களின் வெற்றிகட்கெல்லாம் உதவிய காரணத்தால் இவர்கள் கோவேந்தர் என்று சிறப்பிக்கப் பட்டுள்ளார்கள் என்று புலவர் கூறியுள்ளார். ஏற்கெனவே அந்நாட்டிற்கு வேந்தன் இருக்கும் பொழுது எப்படி சிறப்புப் பெயராக இக்கூட்டத்தினருக்கு வழங்க முடியும்? எனவே முன்பே கூறியபடி இவர்களுக்கு கூட்டம் தொடங்கும் பொழுதே இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.


29.  சாத்தந்தை கூட்டம் -  சாத்தன் என்ற பெயர் பழங்காலத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகப் புலவர் திரு. ராசு கூறுகின்றார். ‘ சாத்தான் ‘ என்ற பெயர் பழங்காலத்தில் புத்தர், அருகதேவன், அய்யனார் முதலிய பலருக்கு சாத்தன் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது. சாத்தன் என்ற புகழாளனின் தந்தையை கூட்டத்தின் முதல்வராகக் கொண்டு வழி வந்தவர்கள் தங்களை சாத்தந்தைக் கூட்டத்தினர் என்று கூறிக் கொண்டனர் எனலாம் என்று புலவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.. 


எனது விளக்கம் 


மேற்கூறிய கருத்துகள் சரி என்கின்றேன். ஆனால் ஆதன் + தந்தை - ஆந்தை என்பதை நான் ஏன் ஏற்கவில்லை. நான் முன்பே அக்கூட்டத்தைப் பற்றிய குறிப்பு எழுதும் பொழுதே ஆந்தைகள் வாழும் மரங்களை ஒட்டிய காட்டில் வசித்து வந்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளேன். ஆதன்+ தந்தை =ஆந்தை என்பது ஆகாது என்பதற்கு காரணம் ஆந்தைப் பறவையை அனைவருக்கும் பிடிக்காது. எனவே அப்பெயரால்  ஆதன்+ தந்தை - என்று ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் ஆதன் தந்தைக்கு  ஒரு பெயர் இருந்திருக்குமல்லவா? அப்பெயரால்தானே கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இங்கு சாத்தன் என்பதற்கு வணிகன் என்று பொருள். சாத்தனின் தந்தை சாத்தனின் சிறு வயதிலேயே இறந்திருக்கலாம். இல்லை என்றால் அவருக்கு என்று ஒரு பெயர் இருந்திருக்குமல்லவா? அப்பெயரை கொண்டு கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? சாத்தன் தந்தை இறந்து விட்டதாலும் சாத்தன் தன் உடன் பிறந்தோரை விட பெரும் பெயரும் புகழும் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே அக்கூட்டத்தினரை சாத்தனின் தந்தை வழி வந்தவர்கள் என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.  



30.  செங்கண்ணன் கூட்டம்  -  புலவர் திரு.ராசு அவர்கள் கண்ணன் என்பது தொன்மையான பெயர் என்றும் அப்பெயர் பல அடைமொழிகளோடு  ‘முதுகண்ணன்,நக்கண்ணன்,நெடுங்கண்ணன்,பெருங்கண்ணன், எனப் பல அடைமொழிகளோடு வரும் பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காணுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த அடைமொழி கொண்ட பெயர்கள் போல செம்மை + கண்ணன் =செங்கண்ணன் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார். செம்மை என்பது நல்ல பண்புடைய என்று பொருளாகும்.பல சங்க இலக்கிய பாடல்களை எழுதிய புலவர்கள் சிலரின் பெயர்களாக செங்கண்ணன்,காவிரி பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், மதுரைச் செங்கண்ணனார்.தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணன் போன்ற பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.



எனது விளக்கம் 


கண்ணைப் பொருத்தவரையில் செம்மையான கண் என்பது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக பெண்களின்  கண்களுக்கு உவமையாக வேல், மீன் போன்றவைகளைக் கூறுவதுண்டு. எனவே கூட்டத்தின் முதல்வனுக்கு கண் செந்நிறத்தில் இருந்திருக்க வேண்டும். இன்றும் ஒருவித கண் நோய் காரணமாக கண் எப்பொழுதும் சிவந்திருப்பதைக் காணலாம். ஆகவே கூட்டத்தின் தலைவனுக்கு அவ்வாறு கண் சிவந்திருந்திருக்க வேண்டும். எனவே செங்கண்ணன் என்ற பெயர் கொண்டு கூட்டத்தினர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.  மற்றொரு கருத்தும் எனக்கு உண்டு. கரும்புக்கு கன்னல் என்ற பெயர் உண்டு. கரும்பில் பல வகை உண்டு. அதில் செங்கரும்பும் ஒருவகையாகும்.அக்கரும்பை தொடர்ந்து பயிரிட்டு வந்ததால் செங்கரும்பு கூட்டத்தினர் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.செங்கரும்பு என்ற பெயர் செங்கன்னல் என அக்காலத்தில் அழைக்கப்பட்டு பின் அது மருவி செங்கண்ணன் என்ற பெயர் உண்டாகியிருக்கலாம் .


31. செங்குண்ணி கூட்டம்  - கொங்கு வேளாளர் கூட்டங்களில் செங்கண்ணன், செங்குண்ணி ஆகிய கூட்டங்கள் வேறு வேறானவை என்று திரு. டி. எம். காளியப்பா அவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் திரு. நல் . நடராசன் கண்ண கூட்டத்திலிருந்து முதலில் செங்கண்ண கூட்டம் பிறந்து,பின் செங்கண்ண கூட்டத்திலிருந்து பிரிந்ததே செங்குண்ணி கூட்டம் என்று எழுதியுள்ளதாகவும், பின்னர் அதை செங்கண்ணி கூட்டம் என்று எழுதியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



எனது விளக்கம் 


புலவர் அவர்கள் குன்றி என்பது சிறப்புமிகு ஒருவகை மரம் என்றும் அதனை செங்குன்றி என்றும் மக்கள் கூறுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கத்தை எடை பார்க்க பயன்படும் குன்றிமணியைக் கொடுப்பதும் குன்றி மரம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழ் பேரகராதியிலும் செங்குன்றி என்பதற்கு பொன் நிறுத்த பயன்படும் சிகப்பு, கருப்பு நிறத்தாலான கொட்டை என்றுள்ளது. எனவே புலவர் அவர்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.



32. செம்பன் கூட்டம்  -  செம்பன் என்ற கூட்ட முதல்வரால் செம்பன் கூட்டம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று புலவர் குறிப்பிடுகிறார்.செம்பன் இயற்பெயரே என்று திரு டி.எம். காளியப்பா அவர்கள் கூறுகிறார். செம்மையான இயல்புகளைக் கொண்ட இவர்கள் செம்பன் என்றும்,சோழன் வேண்ட சேரனுக்கு உதவியதால் செம்பியன் என்றும் பெயர் பெற்றார்களென்று திரு.தே. ப. சின்னசாமி கூறுகிறார் இக்காலத்தில் சிலர் திருத்தமாகக் கூறுவதாக எண்ணிச் செம்பொன் கூட்டம் என்று கூறுவதாக புலவர் குறிப்பிட்டுள்ளார்.


எனது விளக்கம் 


தமிழ் பேரகராதியில் செம்பன் என்பதற்கு “ சிவலை “ என்று பொருள் உள்ளது. சிவலை என்றால் செம்மை நிறத்தில் உள்ள பசு அல்லது காளை என்று பொருள்.பொதுவாக நம் இனத்தார் கால்நடைகளை அதிகம் வளர்த்து வந்துள்ளனர். எனவே அவ்வாறான கால்நடைகளில் பெரும்பாலும் செம்மை நிறத்தில் இருந்திருக்க வேண்டும். எனவே அக்கூட்டத்தாருக்கு செம்பன் கூட்டத்தார் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். என்பது என் கருத்து.



33. செம்பூத்தன் கூட்டம்  -  இக்கூட்டம் செம்பூதன்,செம்பூதர்,செம்பூத்தர், செம்போத்த, செம்பூத்தை எனப் பலவாறாக குறிக்கப்படுவதாக புலவர் குறிப்பிட்டுள்ளார். செம்ப கூட்டத்திலிருந்து இக்கூட்டம் தோன்றியதற்கு பூத்து, போந்து, என்றெல்லாம் காரணம் காட்டும் திரு. நல். நடராசன் போன்றோர் கூறுவது ஆய்வுக்குரியது என்கிறார் புலவர் அவர்கள். ஆந்தை, காடை,கூட்டங்கள் பெயர் பெற்றதற்கு பறவைகளைக் காரணம் காட்டுவது போல செம்போத்து என்ற பறவையின் பெயரால் இக்கூட்டம் பெயர் பெற்றது என்ற கருத்தும் உண்டு.


எனது விளக்கம் 

செம்போத்து என்று ஒரு பறவை உள்ளது. சிலர் அறிந்தும் அல்லது அறியாமலும் இருக்கலாம்..நான் ஏற்கெனவே கூறியபடி எப்படி ஆந்தைகள், காடைப் பறவைகள் வயல்களுக்கு அருகே இருந்த காட்டு மரங்களில் வாழ்ந்து வந்ததால் அப்பெயர்கள் கூட்டங்களுக்கு ஏற்பட்டது என்று கூறியது போல் இக்கூட்டத்தினர் வயல்களின் அருகே செம்போத்து பறவைகள் வாழ்ந்து வந்ததால் இக்கூட்டத்தினருக்கு அப்பெயர் ஏற்பட்டிருக்கும் என்பது என் கருத்து,




34. செல்லன் கூட்டம்  -  இக்கூட்டத்தின் முதல்வரின் பெயர் செல்லன் என்று பெயரிருந்து அவருக்குப் பின்வந்த கால் வழியினர் செல்லன் கூட்டத்தார் என்று அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.செல்லம் உடையவர் செல்லன் ஆவார். செல்லம் என்பதற்கு அருமை, பண்பு, சுகம், செல்வம், அழகு,  வளம் என்ற பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. திரு.நல். நடராசன் அவர்கள் “செல்” என்பதற்கு மேகம் என்ற பொருள் உண்டு.வெள்ளம் ஆகிய நீரைத் தேக்கிப் பயிர் செய்பவன் வெள்ளாளன். கார் ஆகிய மேகத்தை நம்பி வாழ்பவன் காராளன்,செல் ஆகிய மேகத்தை நம்பி உழவு செய்பவன் ‘செல்லன்’ ஆனான் என்று கூறுகிறார். 



எனது விளக்கம் 


தமிழ்ப் பேரகராதிப் படி செல்லன் என்ற சொல்லுக்கு செல்லப் பிள்ளை, செல்வமுடையவன், என்று பொருள் கூறுகிறது. திரு நல். நடராசன் அவர்கள் கூறியபடி பார்த்தால் உழவு செய்யும் அனைவருமே மழை பொழியக் கூடிய மேகத்தை நம்பித்தான் உழவுத் தொழில் செய்கின்றனர். அப்படிப் பார்த்தால் எல்லாக் கூட்டத்தினரும் செல்லன் கூட்டம் என்றாகி விடுமே. எனவே இக்கருத்து ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. என் கருத்துப்படி அக்கூட்டத் தலைவன் செல்வம் மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர் வழி வந்தவர்கள் செல்லன் கூட்டத்தினர் என்ற பெயர் பெற்றனர்.



35. செவ்வந்திக் கூட்டம்  -  புலவர் அவர்கள் திரு. டி. எம். காளியப்பா, திரு.இரா.இரவிக்குமார்,திரு.. தே.ப. சின்னசாமி ஆகியோர்கள்   ‘செவ்வந்திச் செடியிலிருந்து இக்கூட்டப் பெயர் தோன்றியிருக்கலாம் என்று கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புலவர் அவர்கள் கருத்துப்படி ஒரு வகை செந்நிற மணிக்கல் ஒன்றுக்கு செவ்வந்தி என்ற பெயரும் உண்டு என்றும், ஒருவகைப் பூவிற்கும் செவ்வந்தி என்ற பெயரும் உண்டு என்பதால் மலரினாலோ, அல்லது மனிக்கல்லினாலோ இக்கூட்டத்திற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.



எனது விளக்கம் 


இக்கூட்டத்தாரின் விளைநிலத்தில் ஏகப்பட்ட இவ்வகைப் பூக்கள் எங்கு பார்த்தாலும் தானாக முளைத்து காணப்பட்டிருக்க வேண்டும். அல்லது அந்நிலத்தில் செந்நிற மணிக்கற்கள் நிறைய காணப்பட்டிருக்க வேண்டும். எனவே புலவர் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.



36.  செவ்வாயர் கூட்டம்  -  செவ்வாயர் கூட்டப் பெயரை செம்மை + ஆயர், செம்மை + வாயர், என இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். ஆயர் என்று நல். நடராசனும்,வாயர் என்று, தே. ப. சின்னசாமி அவர்களும் பிரித்து, நல்லபடியாகக் கால்நடைகளை மேய்ப்பவர்கள் ஆயர் ; நல்லபடியாக சொற்களை பேசக் கூடியவர்கள் வாயர் என்று பொருள் கூறியுள்ளதாக புலவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். புலவர் அவர்களின் கருத்துப்படி செம்மையான, நல்ல, நயமாகப் பேசுபவர்கள் என்ற கருத்தே ஓரளவு போருத்தமுடையதாகத் தெரிவிக்கின்றார்.


எனது விளக்கம் 


இக்காலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் ஏமாற்றுதல், வாக்கு தவறுதல், போன்றவைகளில் ஈடுபடுவது அரிது. மேலும் சொன்ன சொல் தவறாது வாழ்ந்தவர்களாகத்தான் அனைத்துக் கூட்டத்தினரும் இருந்தனர். இலவங்கப்பட்டைக்கு செவ்வாவிரை என்ற பெயர் உண்டு. எனவே இக்கூட்டத்தாரின் விளைநிலங்களில் செவ்வாவிரை மரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். செவ்வாவிரை என்பது பிற்காலத்தில் செவ்வாயர் என்று பெயர் மருவியிருக்கலாம் என்பது என் கருத்து.



37. சேகர் கூட்டம்  -  அலகுமலைக் குறவஞ்சியில் ‘சேகர்’ என்றும்,வேளாளர் குலக்கும்மிப் பாடலிலும் கொடுமணல் இலக்கியத்திலும், என்றும் குறிக்கப் பெறும் கொங்கு வேளாளர் கூட்டம் சேகர் கூட்டம் என்கிறார் புலவர். திரு.தே.ப. சின்னசாமி மட்டுமே இக்கூட்டத்தை குறிப்பிடுகிறார் என்றும், சே என்பது காளையைக் குறிக்கும் என்று குறிப்பிடுகிறார் என்று புலவர் கூறுகிறார். மேலும் இக்கூட்டத்தை ‘சேகர கூட்டம் ‘ என திரு.க. கிருஷ்ணசாமி குறிப்பிடுவதாகக் கூறுகிறார்? ‘சேகு’ என்ற சொல் சிவப்பு,திண்மை,என்ற பொருளைக் குறிக்கிறது. சேகர் என்பதற்கு மூத்தோர், சிறந்தோர்,என்ற பொருளும் உண்டு. பண்டங்களைச் சேகரிப்பவர் ‘சேகர்’ எனப்படுவார் என்று புலவர் குறிப்பிடுகிறார்.



எனது விளக்கம் 


தமிழ் அகராதியில் மாமரத்திற்கு சேகம் என்ற பொருளும் யாழ் அகராதியில் முருங்கை மரம் என்றும் உள்ளது. எனவே இக்கூட்டத்தாரின் விளைநிலங்களில் மாமரம் அல்லது முருங்கை மரங்களோ அதிகம் காணப்பட்டு அதனால் இக்கூட்டத்திற்கு சேகம் கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் சேகர் கூட்டம் எனப் பெயர் மருவியிருக்கலாம் என்பது என் கருத்து.


38.  சேடர் கூட்டம்  -  சேடன் என்ற கூட்ட முதல்வரின் வழி வந்தவர்கள் சேடன் கூட்டத்தினர் என்று பெயர் பெற்றனர். திரு.கு. சேதுராமன் “ சேடம் - மீதி, நெசவு, மதிப்பு, அழகு, பாம்பு என்றாகும் என்கிறார். சேமிக்கும் தன்மைக்கும், தேக்கி வைத்து அதிக இலாபத்திற்கு விற்கும் இயல்பும் சேடர்களிடம் இருக்கலாம் என யூகிக்க முடியும் என்றும் கூறுகிறார். சேடன் என்பதற்கு பாம்பு, நாகம், என்றும் பொருள் உண்டு. நாக வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் சேட கூட்டத்தினர் இருக்கக் கூடும் என்று புலவர் கூறுகிறார்.



எனது விளக்கம்   


தமிழ் அகராதியில் சேடன் என்பதற்கு பெரியோன் என்றும், தோழன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கூட்டங்கள் உண்டான பொழுது இக்கூட்டத் தலைவர் எல்லோருக்கும் பெரியோராக இருந்திருக்க வேண்டும். அதனால் இக்கூட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்பது என் கருத்து,



39. சேரன் கூட்டம்  -  சேரன் என்பது உழவுத் தொழிலோடு தொடர்புடையவன் பெயர். விளைந்த தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பவர்  - சேரன் ஆயினர் என்றும் சேரன் - சேரலன் இரண்டும் ஒரே கூட்டம் என்றும் திரு. நல். நடராசன் கூறுவதாக புலவர் கூறுகின்றார்.சேரன் கூட்டத்தினர் சேரன் மரபினர் என்று திரு. தே. ப. சின்னசாமி கூறுவதோடு கொங்கு வேளாளர் சேர அரச மரபினர் ஆகியிருக்கலாம் என்றும் கூறுகின்றார். திரு கே. பழனிசாமி புலவர் மாந்தரஞ்  சேரல் வழியினர் சேரன் கூட்டத்தார் என்று கூறுவதாக புலவர் எழுதியுள்ளார். 


எனது விளக்கம் 


தமிழ் நிகண்டுகள் சேரனுக்கு கொங்கன் எனப் பெயர் உண்டு எனக் கூறுவதாக புலவர் எழுதியுள்ளார். மெக்கன்சி ஆவணங்கள் கொங்கு பாளையப்பட்டு சந்ததியினர், “சேரனுக்கு கொண்கன் என்றும் பேர் வரப்பட்டுயிருக்கிறபடியால்  “கொங்கு வேளாளர்” என்னும் பேர் வரப்பட்டு” என்று கூறுகிறது என்று புலவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வேளாளர்கள் வீட்டில் சேரர் பெண் எடுத்தது பதிற்றுபத்தில் கூறப்படுகிறது என்று புலவர் எழுதியுள்ளார்.கொடுமணல் அகழாய்வில், அந்துவன், ஆதன், போன்ற சேரர் தொடர்பான பல பெயர்கள் கிடைத்துள்ளன. கொற்றநூர்,முத்தூர்,கோனூர், கந்தம்பாளையம், சித்தழுந்தூர், கொடுமணல், மணவாடி, வடுகப்பட்டி, ஆகியவை சேரன் கூட்டத்து காணியூர்களாகும் . எனவே இவைகளின்படி சேரன் கூட்டம் கொங்கு வேளாளர் கூட்டங்களில் ஒன்று என்பது உறுதியாகின்றது.



40. சேரிலான் கூட்டம்  -  சேரிலான் கூட்டம் சேரன் கூட்டத்திளிருந்து வேறுபட்டது என்றும், அலகுமலைக் குறவஞ்சி, வேளாளர் குலக் கும்மி, கொடுமணல் இலக்கியங்கள் ஆகியவை சேரன் கூட்டம், சேரிலான் கூட்டம் இரண்டையும் வேறுபடுத்தித் தனிக் கூட்டங்களாகவே காட்டுகின்றன என்று புலவர் கூறுகின்றார். திரு நல். நடராசன், திரு. மோகனசுந்தரம், ஆகியோர் சேரன் கூட்டம், சேரிலான் கூட்டம் ஆகிய இரண்டையும் ஒன்றாகவே கருதுவதாக புலவர் கூறுகின்றார்.



எனது விளக்கம் 


சேரிலான் என்பதற்கு தமிழ் அகராதியில் பொருள் எதுவும் கூறப்படவில்லை. பொதுவாக இலான் என்ற பொருளுக்கு இல்லை என்ற பொருளாகும் சேர்+ இலான் = சேரிலான் என்று பொருள் பிரித்துப் பார்த்தால் அவ்வளவு சீக்கிரம் மற்றவர்களுடன் சேர்வதில்லை என்ற பொருள் கிடைக்கும். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு தலைவரின் தனி குணமாகும். அதனால் அவர் வழி வந்தவர்களும் அதே குணம் கொண்டவர்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.ஆனால்  முதலில் கூறியபடி அவ்வளவு சீக்கிரம் யாருடனும் பழகாத தலைவனுக்கு அப்பெயர் ஏற்பட்டு அவர் வழிவந்தவர்கள் சேரிலான் கூட்டத்தினர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து.



41.  தனஞ்செயன் கூட்டம்  -  புலவர் அவர்கள் 14 ஆம் நூற்றாண்டு ஆவணங்களில் தனிஞ்சி கூட்டம் என்றும் 16 -ஆம் நூற்றாண்டில் ‘தனஞ்சு கூட்டம்’ என்றும் அழைக்கப்பட்டதாகவும் 17-18 ஆம் நூற்றாண்டுகளில்தான் தனஞ்செயன் கூட்டம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.சில அறிஞர்கள் இக்கூட்டத்தை தழிஞ்சி கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.தழிஞ்சி என்பதற்கு போரில் காயமுற்றோர்களுக்கு அரசன் அவர்களுக்கு ஆறுதலும், பாராட்டும் தெரிவித்தும் பொருள் கொடுத்து தழுவிக் கொள்ளுதல் என்றாகும். 


எனது விளக்கம் 


தனஞ்செயன் என்பதில் தனம் என்பது வடமொழிச் சொல் அல்ல என்றும் செல்வம் என்று பொருள் என்று தமிழ் பேரகராதி கூறுகின்றது. புலவர் அவர்கள் சிலர் தனம்செயன் என்று பிரித்து செல்வத்தை உண்டாக்குபவர்கள் தனஞ்செயன் கூட்டத்தார் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனவே தழிஞ்சி என்ற பொருள்படி அதிக போர்களில் கலந்து காயமடைந்து அரசனிடம் பொருள் பெற்றதால் பின்காலத்தில் இக்கூட்டத்தினருக்கு செல்வத்தை உண்டாக்குபவர்கள் தனஞ்செயன் கூட்டத்தினர் என பெயர் பெற்றிருக்கலாம்  என்பது என் கருத்து.



42.. தேவேந்திரன் கூட்டம் -  புலவர் அவர்கள் கொங்கு வேளாளர் பெருமக்கள் கூட்டங்களில் சிறப்புமிகு பெயர் பெற்றவர்கள் தேவேந்திர கூட்டத்தார். தேவேந்திரன் தேவர் தலைவன், நூறு அசுவமேத (குதிரை} யாகம் செய்து இப்பதவியைப் பெற்றான் என்று எழுதியுள்ளார். தேவேந்திரன் மேகவாகனன்.மழை தரும் கடவுள் வயல்கள் கொண்ட மருத நிலத் தலைவன்.பழந்தமிழர் புகார் நகரில் தேவேந்திரனை வணங்கி இந்திர விழா கொண்டாடினர், இக்காரணங்களால் தேவேந்திரனை வணங்குவோர் தேவேந்திர கூட்டத்தினர் என்று தங்களை அழைத்துக் கொண்டிருக்கலாம் என்று புலவர் எழுதியுள்ளார். மேலும் 9 கீர்த்திப் பாடல்,அலகுமலைக் குறவஞ்சி, வேளாளர் குலக் கும்மி, கொடுமணல் இலக்கியங்கள், செப்பேடு ஆகியவை இக்கூட்டத்தை தேவேந்திரக் கூட்டம் என்றும், இக்கூட்டத்தை பழங்கல்வெட்டுகள் தேவந்தைக் கூட்டம் என்று கூறுகின்றன. 1804- ஆம் ஆண்டு மொஞ்சனூர்க் கல்வெட்டு மட்டும் தேவேந்திர கூட்டம் என்று கூறுகிறது என்கிறார்  தேவந்தி என்னும் சொல்லை தேவன்+தந்தை என்று பிரிக்கலாம்.சாத்தான்+ தந்தை= சாத்தந்தை; பொருளன் + தந்தை = போருளந்தை ஆவது போல் தேவன் + தந்தை = தேவந்தை ஆவதற்கு இலக்கண விதி கூறுகிறது என்கிறார் புலவர்.ஆனால் இப்பொழுது ‘தேர்வேந்தர் கூட்டத்தார்’  என்று அழைத்துக் கொள்வதையும் அப்படி எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 


சங்க காலத்தில் இந்திர வழிபாடு

இந்திர வழிபாடு மற்றும் இந்திர விழா எடுக்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடையே நிலவிய செய்தியினைப் பற்றிக் குறிப்பிடும் ஒரே எட்டுத்தொகை நூல் ஐங்குறுநூறு ஆகும்.

இந்திர விழவின் பூவின் அன்ன,
புன்தலைப் பேடை வரி நிழல் அகவும்,
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?

(ஐங்குறுநூறு 62; மருதம், கிழத்தி கூற்றுப் பத்து)

மலரைப் போன்று சிவந்த தலையைக் கொண்ட பெண் மயில், தரையின் மீது வரிவரியாக விழுந்துள்ள நிழலில் அமர்ந்து அகவுகின்ற ஊர் இதுவாகும்.

இவ்வூரில் இந்திர விழா நடைபெற்றபோது உன்னுடைய தேர் முழுவதுமாகப் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இவ்வாறு எல்லாப் பெண்களையும் ஒருசேர அழைத்துக் கொண்டு போய்க் களியாட்டம் ஆடிவிட்டு அமைதியாகத் திரும்பி வந்துள்ளாய்.. அது போகட்டும், இப்போது உன்னுடைய அந்தத் தேர் எங்கே?

வேந்தன் மருத நிலத்தின் கடவுளாகச் சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகிறான். மருதநிலத்தில் வாழ்ந்த உழவர் குடிமக்கள் வேந்தனைத் தமது கடவுளாக ஏற்று வணங்கினர். வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும்.


எனது விளக்கம் 


சங்க காலத்தில் இந்திர வழிபாடு பற்றிய மேற்கண்ட குறிப்பில் தேவன் என்ற பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. காரணம் தேவ என்பது வடமொழிச் சொல்லாகும். மேற்கண்ட பதிவில் இந்திரனிடம் உனது தேர் முழுவதும் பெண்கள் கூட்டம் நிரம்பியிருந்ததே. அந்தத் தேர் எப்பொழுது எங்கே என்று கேள்வி கேட்பது போல் உள்ளது. வேந்தனாகிய இந்திரன் தேர் வைத்திருந்ததாக பாடல் வருகிறது, எனவே தேர் வேந்தன் என்ற பெயர் இக்கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்கலாம். ஆரியர் வருகைக்குப் பின்னரே தேவன் என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. அதற்கு முன்னர் அப்பெயரை மக்கள் அறிந்ததில்லை. சங்கப் பாடல்களில் அப்பெயர் வந்திருக்குமானால் அது ஆரியர் வருகைக்குப் பின்னர் எழுதப்பட்ட பாடலாக இருக்கும். எனவே தேர் வேந்தன் என்பதே இக்கூட்டத்தின் சரியான பெயராக இருக்கும் என்பது என் கருத்து.




43. தூரன் கூட்டம்  -  நான் முன்பு எழுதிய நூலில் தூரமாக அதாவது தொலைவில் இருந்தவர்கள் என்பதால் தூரன் கூட்டத்தினர் எனப் பெயர் பெற்றனர் என்று எழுதியிருந்தேன். ஆனால் தூரம் என்பது வடமொழிச் சொல்லாகும். எடுத்துக் காட்டாக தூர் தர்ஷன் என்பதை நாம் தொலைகாட்சி என்கிறோம். தூரம் என்பது வடமொழிச் சொல். அதற்கு  தொலைவு என்பதே தமிழ்ச் சொல்லாகும்.திரு. டி. எம். காளியப்பா அவர்களும், திரு. மோகனசுந்தரம் அவர்களும் தூரன் கூட்டத்தார் அடையாளச் சின்னம் துவரைச் செடி. ஆகவே துவரைச் செடியின் பெயரால் இக்கூட்டம் பெயர் பெற்றது என்று கூறுகிறார்கள். பொதுவாக நெற்பயிர் தூர் கட்டி வளர்கிறது என்பர். அது போன்று வேளாண்மையில் சிறந்தவர்கள் தூரன் எனப்பட்டனர் என்கிறார் திரு.தே.ப. சின்னசாமி. புறநானூற்றில் புலவர் கபிலர் அவர்கள் இருங்கோவேள் எனும் அரசனைப் புகழும்போது துவரையைச் சார்ந்தவர்கள் தூரன் கூட்டத்தினர் என்று கூறுவார்.திரு. வி. இராமமூர்த்தி, திரு. க. பழனிச்சாமி ஆகியப் புலவர்கள், தூர தேசத்திலிருந்து வந்த காரணத்தால் தூரன் எனப்பட்டனர் என்று கூறுகின்றனர்.


எனது விளக்கம் 


தூரம் என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பது தெளிவு. மேலே கூறியபடி துவரைச் செடி அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பதால் அது மருவி தூரன் என்று கூற வாய்ப்புள்ளது. மேலும் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். தூறன் என்ற சொல்லாகவும் இருந்திருக்கலாம் அல்லவா? அப்படிப் பார்த்தால் அக்கூட்டத் தலைவன் காமுகன் , வஞ்சகன் என்ற பொருள் வருகின்றது. அக்காலத்தில் மக்கள் அனைவரும் ஒழுக்கமுடையவர்களாகவே இருந்துள்ளனர். அதுவும் ஒரு கூட்டத்தின் தலைவன் அவ்வாறு தரங்கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை. எனவே துவரைச் செடியை அடையாளமாகக் கொண்டவர்களே பின்னர் மருவி தூர என்ற பெயர் ஏற்பட்டு தூரன் கூட்டத்தினர் என்றாகியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.



44.  தோடை கூட்டம்  -  புலவர் அவர்கள் ‘தோடு’ என்பது பழமையான காது அணிகலன்களில் ஒன்று என்றும், மணிமேகலையிலும், சிலப்பதிகாரத்திலும்,தேவாரத்திலும் ‘தோடு’ என்ற காதணியின் பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். தோடு உடையவர்கள் தோடர் கூட்டம், தோட கூட்டம் என்றும் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் குழுவான தொகுதிக்கும், ஆடாதோடை என்னும் கொடி வகைக்கும், எலுமிச்சை வகைக்கும் தோடை என்ற பெயர் உரியதாக உள்ளது. இவை கூட்ட அடையாளச் சின்னமாகவும் இருக்கலாம் என்று புலவர் கூறுகின்றார். ‘சித்தண்ணவாசலில் ‘ உள்ள தொல் தமிழ் கல்வெட்டில் ‘தோடன்’ என்ற பெயர் காணப்படுகிறது எனவே தோடன் என்பது இயற்பெயராயும் இருக்கக் கூடும் என்று புலவர் அவர்கள் கூறுகிறார். ஆனால் பேரகராதியில் இப்பெயருக்கு பொருள் இல்லை.



எனது விளக்கம் 


பழங்காலத்தில் அனைத்துக் கூட்டத்தினரிலும்  ஆண், பெண் இருவருமே காதில் தோடு அணிந்திருந்தனர், எனவே இக்கூட்டத்தார் மட்டும் தோடு அணிந்திருந்தனர் என்பதை ஏற்க இயலாது. எனவே காதில் அணியும் தோடு மூலம் இக்கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்காது. பொதுவாக உழவுத் தொழில் தொடர்புடைய பெயர்களைத்தான் நம் கூட்டப் பெயர்களில் அதிகம் காண முடியும். எனவே ஆடாதோடை என்பதன் மூலமாகவோ, எலுமிச்சை மரங்கள் மூலமாகவோ இக்கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.



45. நீருணியர் கூட்டம்  -  திரு. க. பழனிசாமிப் புலவர் நீர் வளம் மிக்க செழிப்பான நிலங்களுக்கு உரிமையுடையவர்கள் நீருணியர் கூட்டத்தார் என்று கூறியுள்ளார்.  திரு. தே.ப. சின்னசாமி உண்ணும் நீர்க்கிணறுகளை தோண்டி வைத்தவர்கள் நீருணி கூட்டத்தார். மக்களுக்கு மட்டுமல்ல ஆவும், மாவும் சென்று உண்ணும் வகையில் ஏரி, குளம், குட்டை அமைத்தவர்கள் என்றும் கூறுகிறார். நீருண்ணியர் கூட்டத்தின் பெயர் எவ்வாறு பிறந்தது என்பது இதுவரை நடத்திய ஆய்வில் புலப்படவில்லை என்று கூறிய திரு. மோகனசுந்தரம் நீர்வாழ் பிராணியின் அடையாளத்திலிருந்து இக்கூட்டப் பெயர் தோன்றியிருக்கலாம் என்று கூறுகிறார்.


எனது விளக்கம் 


நீரைக் குடிப்பது அல்லது அருந்துவது என்பதுதான் தமிழ்ப் பேச்சின் அடையாளம். உணவு உண்பது சோறு உண்பது என்பதும் அதே வகைதான். உண்ணுவது என்பது சாப்பிடுவது என்று பொருளாகும். நீரை சோறு அள்ளிச் சாப்பிடுவது போல நீரை அள்ளிச் சாப்பிட முடியாது. எனவே இது நீர்வாழ் விலங்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பது என் கருத்து. மேலும் புலவர் முதலியார் வகுப்பினரில் பலரை  “நீருணி வேளாளர் “  என்று கல்வெட்டுகளில் குறிப்ப்டப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.



46.  பண்ணை கூட்டம்  -  புலவர் அவர்கள் வேளாண்மை நிலங்களைப் பண்ணை என்று அழைப்பர்.பண்ணையையுடையவர் ‘பன்னையக்காரன்’ எனப்பட்டார்.அவர் செய்யும் உழவுத் தொழில் ‘பண்ணையம்’ எனப்பட்டது இவ்வாறான ‘பண்ணை’ நிலங்கட்குச் சொந்தக்காரர்கள் என்ற பெயரில் இக்கூட்டம் ‘பண்ணை கூட்டம்’ என்று அழைக்கப்பட்டது என்பதே பெரும்பான்மையானவர்கள் கருத்து. ஆனால் எல்லாக் கூட்டத்தினரும் உழவுத் தொழிலையே முதன்மையாகச் செய்து வந்ததால் எல்லோருமே பண்ணையக் காரர்கள்தான். கொடுமணல் அகழாய்வில் 2000 ஆண்டுகட்கு முந்தைய கிடைத்த பானையோட்டில் பண்ணன் என்ற பெயர் பொறிக்கப் பட்டுள்ளதாகவும், செங்கம் பகுதி நடுகற்களில் “பசீரப் பண்ணன்”, “நகர ஊராளிப் பண்ணன் நாட்டான்” என்ற பெயர்கள் காணப்படுவதாகப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே ‘பண்ணன்’ என்ற பெயருடையவர்கள் வாழ்ந்த கூட்டம் பண்ணன் கூட்டம் என்று அழைக்கப்பட்டு பண்ணை கூட்டமாகப் பெயர் பெற்றது என்று சிலர் கூறுகின்றனர் என்று புலவர் கூறுகின்றார். திரு.தே..பே. சின்னசாமி ,ஆட்டுப் பண்ணை, மாட்டுப்பண்ணை போன்ற பெயர்களைக் கூறிப் பண்ணைக்கு உரியவர்கள் பண்ணை கூட்டத்தார் என்று கூறுகின்றார். முதலில் கொங்கு வேளாளர் கூட்ட வரலாறு எழுதிய திரு. டி. எம். காளியப்பா அவர்கள்,கீரை வகையில் பண்ணைக் கீரை மிகவும் சிறந்தது. இப்பன்னைக் கீரையை அடையாளச் சின்னமாகக் கொண்டவர்கள் பண்ணைக் கூட்டத்தார் என்று கூறியுள்ளார்.இக்கூட்டத்தினர் பண்ணைக் கீரையைத் தெய்வமாக மதிப்பவர்கள். இவர்கள் பண்ணைக் கீரையை மிதிக்கக் கூட மாட்டார்கள் என்று கூறுகின்றார். பேராசிரியர் கிருஷ்ணசாமியும் இவ்வாறே கூறுவதாகப் புலவர் கூறுகின்றார். 



எனது விளக்கம் 


பொதுவாகவே நம் இனத்தாரை மற்றவர்கள் அழைக்கும் போது பண்ணையக்காரரே என்றுதான் விளிப்பர்.ஆகவே இக்கூட்டத்தினருக்கு மட்டும் அதன் காரணமாக இப்பெயர் ஏற்பட வாய்ப்பில்லை. இக்கூட்டத்தினர் வேளாண்மை செய்த நில வரப்புகளிலும், மற்ற வெற்று இடங்களிலும் அன்றி எங்கு பார்த்தாலும் பண்ணைக் கீரை தானே வளர்ந்து வந்திருக்க வேண்டும். எனவே, இக்கூட்டத்தினரை அடையாளப்படுத்த பண்ணைக் கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதுமே என் கருத்து. இதையே நான் முன்பு எழுதிய “வெள்ளாள கவுண்டர்கள் அறிய வேண்டியவை” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன். 





47. பதரியர் கூட்டம்    -   பதர் இன்றி நெல் விளைவிப்போர் மிகவும் குறைவு. அதனால் பதர் இல்லாமால் நெல் விளைவிப்பதில் சிறந்தவர்கள் பதரியர் எனப்பட்டனர் என்று திரு. தே. ப. சின்னசாமி கூறுவதாகப் புலவர் குறிப்பிடுகின்றார். பதரி (வதரி) என்பது எலந்தை மரத்தைக் குறிக்கும். எலந்தை மரத்தை அடையாளச் சின்னமாகக் கொண்டவர்கள் பதரியர் எனப்பட்டனர் என்று திரு.இரா. இரவிக்குமார் கூறுவதாகப் புலவர் குறிப்பிடுகின்றார். 



எனது விளக்கம் 


நான் முன்பே கூறியபடி காட்டை அழித்து வேளாண் நிலங்களை உருவாக்கிய போதும் நிலங்களுக்கு அருகில் காட்டு மரங்கள் நிறைய இருக்கும். அவற்றில் நிறைய எலந்தை (பதரி) மரங்கள் இருந்திருக்கும். எனவே இக்கூட்டத்தினரை அடையாளப்படுத்த பதரியர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.




48.  பதுமன் கூட்டம்  -  வேளாளர் 96 கீர்த்திப் பாடல்களிலும், வேளாளர் குலக் கும்மிப் பாடலிலும் பதுமன் கூட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.பழனிப் பகுதியை ஆட்சி புரிந்த வேளிர் மரபினர் “வேள் ஆவிக்கோமான் பதுமன்”என்று குறிக்கப்படுகின்றனர்.திரு.இரா.இரவிக்குமார், திரு. நல். நடராசன் ஆகியோர் இப்பெயரை ‘ வேளாளப் பதுமன்’ என்று எழுதியுள்ளார்.


எனது விளக்கம் 


 பதுமம் என்றால் தாமரை என்று பொருள். எனவே பதுமன் என்ற தலைவனின் பெயரில் தொடங்கிய கூட்டத்தினரின் பெயர் பதுமன் கூட்டம் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து.




49.  பயிரன் கூட்டம்  -  . பயிரன் கூட்டத்தைப் பேச்சு வழக்கில் பயிர கூட்டம் என்றும் அழைப்பர். பயிர்த் தொழில் வேளாளர்கள் அனைவருக்கும் பொதுவான தொழில் என்றாலும் அதில் சிறப்பும் தேர்ச்சியும் பெற்றவர்கள் ‘பயிரன்’என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும், உழவு செய்பவன்  ‘உழவன்’ என்று அழைக்கப்பட்டது போலப் பயிர் செய்பவன் பயிரன் என்று பெயர் பெற்றனர் என்று புலவர் குறிப்பிடுகிறார். 



எனது விளக்கம் 


பொதுவாகவே பயிர் செய்பவர்கள் தங்களது பயிர் நன்றாக வளர வேண்டும் என்று அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்வர். எனவே ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாரை மட்டும் அவ்வாறு அழைக்க முடியாது. பயிரவன் என்றால் தமிழ் அகராதியில் ‘ எளிதில் சினம் கொள்ளாத அல்லது மனக்கலக்கம் அடையாத; உணர்ச்சிவசப்படாத; மனக் கொந்தளிப்புக்கு இடம் கொடாத; அமைந்தடங்கிய; அமைதியான ‘ என்று பொருள். எனவே மேற்கண்ட குணங்களை உடைய ஆள் கூட்டத்தின் முதல்வனாக இருந்திருக்க வேண்டும். எனவே அக்குணங்களைக் கொண்டவரின் வழி வந்தவர்கள் பயிரவன் கூட்டத்தினர் என பெயர் பெற்றிருக்கலாம். பின்னர் அச்சொல் மருவி பயிரன் கூட்டம் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பது என் கருத்து.


50.  பவளன் கூட்டம்  -  புலவர் அவர்கள் பவளன் கூட்டம் பவளத்தால் பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுகிறார். கொங்கு நாட்டில் இயற்கையாகவே பலவண்ண மணிக்கற்கள் கிடைக்கின்றன.அவற்றிலிருந்து பாசியும், மணிக்கற்களும் செய்தது போல கடல் சங்குகளைக் கொண்டு செய்த அணிகலன்கள் அகழாய்வில் கிடைக்கின்றன என்று எழுதியுள்ளார். அணிகலன் செய்யக் கடல் கரையிலிருந்து பவளத்தைக் கொண்டு வந்து ‘ வினை மாண் அருங்கலம் ‘ செய்ய உதவியவர்கள் பவளர், பவளன்  என்று பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார் புலவர்.பவளம் போன்ற செம்மையான குணம் உடையவர்கள் பவளர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று தே.ப. சின்னசாமி கூறுகிறார்.பவளக் கூட்டத்தாரில் ‘நெல்லரிசிப் பவளர், ‘கம்பரிசிப் பவளர் என இரு பிரிவினர் இருப்பதாக கூறப்படுவதால் இவைகளை விளைவிப்பவர்கள் பவளர் எனப் பெயர் பெற்றனர் என்று திரு.நல். நடராசன் கூறுகிறார்.பவளம் பவளக் கூட்டத்தாரின் அடையாளச் சின்னம் என்று கு.சேதுராமன் கூறுகிறார். திரு.டி. எம். காளியப்பா ‘நெல்லரிசி, கம்பரிசி’ பிரிவைக் கூறுகிறார்.



எனது விளக்கம் 


மேற்கண்ட அறிஞர்கள் கூறியபடி நெல்லரிசி, கம்பரிசி என்பதைப் பயிரிட்டவர்கள் என்றால் இரு கூட்டங்களாக உருவாகியிருக்க வேண்டுமே. மேலும் கொங்கு நாடு என்பது இப்பொழுது இருப்பதைப் போல் தமிழ் நாட்டில் உள்ள கோவை மாவட்டமும் அண்டை மாவட்டங்களும் மட்டும் சேர்ந்தது அல்ல. கேரளத்தையும் சேர்த்ததுதான். மலையாள மொழி தோன்றி அநேகமாக 500 / 600 ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். எனவே அங்கு கடல் இருப்பதால் அகழாய்வில் பவளத்தால் செய்த அணிகலன்களும் கிடைத்துள்ளதால் வேளான்மையோடு கூடுதல் தொழிலாக கடலில் கிடைக்கும் பவளத்தை வைத்து அணிகலன்கள் செய்து வந்ததனால் இவர்களுக்கு பவளன் கூட்டத்தார் எனப் பெயர் உண்டாகியிருக்கலாம்.




51.  பனங்காடை கூட்டம் -  புலவர் அவர்கள் காடை கூட்டத்திலிருந்து வேறான கூட்டம் பனங்காடை கூட்டம் என்றும், கி.பி. 8- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கம் வட்டச் சின்னையன்பேட்டை நடுகல்லிலும், ஆத்தூர் வட்டாரம் செந்தாரப்பட்டி நடுகல்லிலும் ‘சாகாடச் சிற்றன்’, ‘சாகாடன் நக்கன் ‘ என்ற பெயர்கள் குறிக்கப்பெற்றிருப்பதால் சாகாடை,பனங்காடை, என்ற வேறுபாடு கூட்டங்கள் தோன்றிய நாளிலிருந்தே வழக்காற்றில் இருந்தது என்பது தெளிவு என்கிறார். ‘ஆத்தூர் காடை கூட்டத்தார் பனங்காடை கூட்டத்தார் என்று அழைக்கப்பட்டனர்’ என்று திரு. டி. எம். காளியப்பா கூறுகிறார். ‘பனைமரம் வளர்த்த காடை கூட்டத்தார் பனங்காடை ஆயினர் என்று திரு.தே. ப. சின்னசாமி கூறுகிறார் என்றும் , இது பொருத்தமாகத் தோன்றவில்லை என்று புலவர் எழுதியுள்ளார். ‘காடை கூட்டத்திலிருந்து தோன்றியது பனங்காடை கூட்டம் ‘ என்று திரு. நல. நடராசன் கூறுகிறார்.  ‘காடை கூட்டமும், பனங்காடை கூட்டமும் ஒரே கூட்டம்தான் என்று திரு.கு. சேதுராமன் கூறுகிறார். ‘பனங்காடு நிறைந்த பகுதியை ஆட்சி புரிந்த காரணத்தால் இவர்கள் பனங்காடர் ஆயினர்’ என திரு.க. பலனிசாமிப் புலவர் கூறியுள்ளார். எல்லோரும் அடிப்படையில் காடை கூட்டமும் பனங்காடை கூட்டமும் ஒன்றே என்று கருதுகிறார்கள்.










எனது விளக்கம் 

புலவர் அவர்கள் இறுதியில் ‘பனங்காடை’என்ற பெயரில் வண்ணப் பறவை ஒன்று உள்ளது. அதற்குக் காட்டுக்காடை,பால்குருவி, கோட்டைக்கிளி என்ற பெயர்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட படத்தில் பலவகைக் காடைப்பறவைகளைக் காண்கிறோம். அப்படிப் பார்த்தால் பலவகைக் காடைப் பறவைகளின் பெயர்களில் கூட்டங்கள் உருவாகியிருக்க வேண்டுமல்லவா?

அடிப்படையில் இரண்டும் ஒரே கூட்டம்தான். வயல்கள் நிறைய பனைமரங்கள் 

சூழ்ந்திருந்த இடத்தில் காடைகள் கூடுகட்டி வசித்து வந்ததால் ஒரு சிலர் காடை கூட்டத்தினர் என்றும் ஒரு சிலர் பனைமரங்களை அடையாளமாகக் கொண்டு 

பனங்காடை கூட்டம் என்று அழைத்திருக்கலாம் என்பது என் எண்ணம். 


 52.  பனையன் கூட்டம் -   பனையன் என்ற கூட்ட முதல்வனால் இக்கூட்டப் பெயர் ஏற்பட்டது என திரு.டி .எம். காளியப்பா கூறுகிறார் என்றும், திரு. நல். நடராசன் இக்கூட்டத்தை ‘பணையர் கூட்டம் ‘ என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பண்ணை என்ற சொல் பணை என மாறும் என்றும் அச்சொல் நிலத்தைக் குறிக்கும் என்றும், நிலத்தை உழுபவர் பணையன் என்று அழைக்கப்பட்டனர் என்று திரு, நல். நடராசன் கூறுகிறார்.  அப்படியெனில் நிலம் உழுபவர் அனைவருமே அவ்வாறுதானே அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால் இது ஆய்வுக்கு உரியது என புலவர் அவர்கள் கூறுகிறார். மேலும் இதற்கு அவ்வாறானச் சான்று இல்லை எனவும் குறிப்பிடுகிறார். கொங்கர் - தமிழரின் வாழ்வோடு இரண்டறக் கலந்த பனைமரம் என்பதன் அடிப்படையிலேயே பனையன் கூட்டம் பெயர் பெற்றிருக்கலாம் எனவும் திணை என்பதைச் சிறு அளவிற்கும் பனை என்பதைப் பெரிய அளவிற்கும் உரிய சொல்லாகப் பயன்படுத்தினர் என்றும் புலவர் குறிப்பிடுகிறார். 



எனது விளக்கம் 


புலவர் ராசு அவர்கள் இக்கூட்டத்தினர் பனை மரத்தோடு தொடர்புடையவர்கள் என்பதால் பனையன் கூட்டம் எனக்  குறிப்பிட்டுள்ளது மிகப் பொருத்தமே  என்பது என் கருத்து.



53.  பாண்டியன் கூட்டம்  -  புலவர் ராசு அவர்களின் கூற்றுப்படி கொங்கு வேளாளர்களில் பாண்டியன் கூட்டத்தார் பாண்டியர்களோடும், பாண்டிய நாட்டுடனும் தொடர்புடையவர்கள். பாண்டியர் தமிழ் இனத்தின் பண்டையோர் என்பார் தேவநேய பாவாணர். பண்டையோர் ஆகிய பாண்டியரோடு தொடர்புடைய பாண்டியன் கூட்டத்தாரும் பண்டையோரே ஆவர் என்கிறார் புலவர்.சங்க காலத்தில் கொங்கு மண்ணில் பாண்டியர் சேரரோடு போர் புரிந்துள்ளனர்.7-ஆம் நூற்றாண்டிலேயே ‘கொடுமுடிக்கு’ ‘பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர் இருந்துள்ளது.இவர்களின் காணி உரிமையுடைய ஊர்களைத் தொகுத்துக் கூறும் இரண்டு காணிப் பாடல்களிலும் ‘மதுரை பாண்டிய கூட்டத்தாரின் காணியூர்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தாரின் காணியூர்கள் பெரும்பாலானவற்றில் ‘மதுரை காளியம்மன்’ (மதுரகாளி)கோயில்கள் இன்றும் உள்ளன.சில ஊர்களில் ‘மருதகாளியம்மன்’எனப் பெயர் மாறி அழைக்கப் படுகின்றன. மதுரை மாவட்டச் சிற்றூர்களில் அடித்தள மக்கள் இன்றும் மதுரையை ‘மருதை’ என்றே அழைக்கின்றனர்.தொடர்பு இல்லாமல் கொங்கு நாட்டில் மதுரை காளியம்மன் கோயில்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார் புலவர். கொங்கு நாட்டில் பல ஊர்ப் பெயர்கள் பாண்டி என்ற பெயர் கலந்து வழக்கில் உள்ளன.ஆனால் ‘எருது பூட்டிய வண்டிக்குப் பெயர் பாண்டியம்’. அதனால் பாண்டியம் என்ற பெயரிலிருந்து பாண்டியர் பெயர் ஏற்பட்டது என்று திரு.டி. எம். காளியப்பா எழுத அவர் நூலைப் பார்த்து திரு.நல். நடராசன், திரு. மோகன சுந்தரம், திரு. கு. சேதுராமன், திரு. தே. ப. சின்னசாமி முதலியார் பலரும் அவ்வாறே பின்பற்றி எழுதியுள்ளனர். கொங்கு வேளாளர் தலைவர்கள் பலர் ‘மன்றாடியார்’பட்டம் பெற்றுள்ளனர்.பாண்டியன் கூட்டத்தாரில் ஒருவரும் ‘மன்றாடியார்’ பட்டம் பெற்றதாகக் கொங்குப் புலவர் பட்டயமும், 24  நாட்டுப் பட்டயமும் கூறுகிறது.அவர் பெயர் மீன நாடு பாண்டி மன்றாடியார்’என்பதாகும்.பாண்டிய கூட்டத்தாரில் சிலர் தங்கள் முதல்வரைப் ‘பாட்டப் பெருமாள்’எண்டு முன்னோர் வழிபாடாக வழிபட்டு வருகின்றனர். பாட்டப் பெருமாளை வணங்குவோர்  மதுக்கரை அருகே பிச்சனூரில் வாழ்ந்து வருகின்றனர்.கோவை கணபதி அருகே உள்ள பூசாரிபாளையம் என்னும் ஊரில் பாப்பம்பட்டி, பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் கூட்டத்தார் ‘ஆயி அம்மன்’ தெய்வத்தை வணங்குகின்றனர்.ஆயி அம்மாளைப் பாட்டப் பெருமாளின் தங்கை என்பார் என்று புலவர் குறிப்பிட்டுள்ளார்.கொங்கு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயில். மூவேந்தர் கூடும் இடம்.அச்சிறப்புமிகு மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் பாண்டியன் கூட்டத்தாரேயாவார்.பல ஊர்களில் பாண்டியன் கூட்டத்தார் செல்லாண்டியம்மனை வணங்கி வருகின்றனர்.


எனது விளக்கம்  


புலவர் அவர்கள் குறிப்பிட்டது போல் நம் இனத்தில் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் இருக்கும்பொழுது எருது பூட்டிய வண்டியை இக்கூட்டத்தார் மட்டும்தான் ஓட்டியதால்  பாண்டியம் என்ற பெயர் உண்டாகி பின்னர் பாண்டியன் கூட்டம் என்றானது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

எனவே பண்டையோர் ஆகிய பாண்டியரோடு தொடர்புடைய பாண்டியன் கூட்டமும் பண்டையோரே ஆவர் என்பது என்னுடைய கருத்தும் ஆகும்.


54.  பில்லன் கூட்டம்  - புலவர் ராசு அவர்கள் கொங்கு வேளாளர் கூட்டங்களுள் வீரத் திறன் கொண்ட சிலவற்றில் பில்லன் கூட்டமும் ஒன்று என்றும் பேச்சு வழக்கில் பில்ல கூட்டம் எனக் குறிக்கப்படும்  இக்கூட்டத்தை புல்லன் கூட்டம், புல்லி கூட்டம், புல்லர் கூட்டம் என்றும் குறிக்கப் படுவதாகக் கூறியுள்ளார்.கால்நடைகட்கு மிகவும் தேவைப்படும் பில் அல்லது புல் எனப்படும் பயிரை வளர்ப்பதில் புதுமை கண்டு வளர்த்தோர் பில்லர் அல்லது புல்லர் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

‘புல்லி’ என்னும் சங்ககால வேளிர் கூட்டத்தலைவன் ,

‘மழபுலம் வணக்கிய மாவன் புல்லி’

‘பொய்யா நல்லிசை மாவன் புல்லி’

‘கல்லா இளைஞர் பெருமகன் புல்லி’

நிறைபல குழீஇய நெடுமொழிப் புல்லி’


என்று பல இடங்களில் புகழப்படுகிறான்.புல்லி வழிவந்தவர் புல்லர் என ஆகியிருக்கக் கூடும் என்கிறார் புலவர். ‘புல்லார்’ என்றால் பகைவர். புல்லாரை வென்றடக்கியவர் புல்லர் என்று கூறப்பட்டிருக்கலாம் , கலிங்கத்தை வென்றவன் கலிங்கன் என்றாவதைப் போல இருக்கலாம் என்கிறார்.

“பில்லன் கூட்டத்தார் புல்லன் என்றும் அழைக்கப்படுவதால் இவர்கள் சங்ககாலம் ‘புல்லி வழியினர்’ என்றும் வள்ளியரச்சலில் இவர்கள் ஐந்தாவது காணியாளராக இருப்பினும்,ஊர்க்காவல்,கோயில் பரிபாலனம்,செல்வநிலை இவைகளில் இவர்களே முதலிடம் பெற்று வாழ்கின்றனர்’ என்று திரு. க. பழனிசாமிப் புலவர் எழுதியுள்ளார்.


எனது விளக்கம் 


புல்லி என்றால் தமிழ் அகராதிப்படி ‘தழுவி’ என்று பொருள்படும். புல்லார் என்றால் பகைவர் என்று பொருள். கலிங்கத்தை வென்றவனுக்கு கலிங்கன் எனப் பெயர் சூட்டுவது சரி. ஆனால் இங்கு புல்லார் எனப்படும் பகைவர் யாரோ அவர் பெயரைத்தானே சூட்டப்பட வேண்டும். இக்காரணப் பெயர்கள் முரணாகத் தெரிகிறது. புள்ளம் என்பது அரிவாள், அல்லது கொடுவாள் என்று பொருள் படும். எனவே அரிவாள், கொடுவாள் போன்ற கருவிகளை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதால் புள்ளம் கூட்டத்தார் என்பது மருவி பின்னர் பில்லன் கூட்டத்தார் என்று பெயர்  ஏற்பட்டிருக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ் அகராதியின் படி பிள்ளை மருது என்பது ஒரு பெரிய மரம். இக்கூட்டத்தாரின் காட்டில் அம்மரங்கள் நிறைய இருந்ததால் இக்கூட்டத்தாருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். பிள்ளை மருது என்பது மருவி பில்லை மருது என்றாகி பில்லை கூட்டத்தார் என்பது நாளடைவில் பில்லன் கூட்டத்தார் என்றாகியிருக்கலாம் என்பது என் கருத்து.அதன் பொருளுக்காக தமிழ் இணைய வழிக் கல்விக் கழக அகராதியின் படம் ஒன்றை கீழே இணைத்துள்ளேன்.













55.  பிள்ளந்தை கூட்டம் -  வேளாளர் 96 கீர்த்திப் பாடல், கொடுமணல் இலக்கியங்கள்,கல்வெட்டு ஆகியவைகளில் மட்டும் குறிக்கப்பட்டுள்ள கூட்டம் இதுவாகும். இந்த அமைப்பில் உள்ள பிற கூட்டங்களைப் போல் பிள்ளன் + தந்தை  = பிள்ளந்தை எனக் கொள்ளலாம் என்று புலவர் ராசு குறிப்பிட்டுள்ளார்.இக்கூட்டத்தினர் பிள்ளன் என்பானின் தந்தை வழி வந்தவர்கள் என்று கொள்ளலாம் எனப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.



எனது விளக்கம் 


பிள்ளை மருது என்று ஒரு வகை மரம் உள்ளது. மருது மரங்கள் தெய்வத்திற்கு சமமாக அக்காலத்திலேயே கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். நம் நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்ட மருது அண்ணன் தம்பி இருவரும் மருது சகோதரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் மருத மரத்தை தெய்வத்திற்கு சமமாக மதித்தவர்கள்.இக்கூட்டத்தினரின் வயல்களுக்கு அருகே பிள்ளை மருது மரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். பிள்ளை மருது மரத்தை தந்தையைப் போல் பாவித்து வணங்கி வந்த கூட்டத்தினராக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து . 



56.  பூச்சந்தை கூட்டம்  -   பூசன் அல்லது  பூச்சன் என்பாரின் தந்தை வழி வந்தவர்கள் தங்களைப் பூச்சந்தை கூட்டத்தினர் என்று அழைத்துக் கொண்டிருக்கலாம். பூசன் + தந்தை ; பூச்சன் + தந்தை என்ற சொற்கள் பூச்சந்தை என மாறுவதற்குத் தொல்காப்பியம் விதி கூறுகிறது. எனவே இக்கூட்டம் தொன்மையான ஒன்று என்று தெரிகிறது. திரு. டி. எம். காளியப்பா, திரு. கு. சேதுராமன் ஆகியோர் பூத்தந்தை என்ற கூட்டமே பூச்சந்தை கூட்டம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர்.மொழியியலில் த,ச, என மாறுவது 

இயல்பேயாகும் என்றும் அத்தன் என்ற சொல் அச்சன் என மாறுவதைக் காணலாம் என்று புலவர் எழுதியுள்ளார். திரு. டி. எம். காளியப்பா சாத்தந்தை கூட்டத்தின் கிளைக் கூட்டம் பூச்சந்தை கூட்டம் என்றும், இக்கூட்டத்தை பூச்சாந்தை கூட்டம் எனக் கொண்டு ஆந்தை இவர்களின் கூட்டச் சின்னம் என்கிறார். இக்கருத்து போருத்தமுடையதாகத் தோன்றவில்லை என்றும் பூச்சாந்தை என்ற சொல் எங்கும் வழக்கில் இல்லை என்றும் புலவர் கூறுகிறார்.திரு. கு. சேதுராமன் பூந்தை கூட்டமும், பூச்சந்தை கூட்டமும் ஒன்றே எனக் கருதுகிறார் என்றும் ஆனால் கூட்டங்கள் வெவ்வேறானவை என்று ஆவணங்கள் கூறுவதாக புலவர் ராசு கூறுகின்றார்.


எனது விளக்கம் 


பூசன் என்பதன் பொருள் அறிவாளி என்றாகும். ஆனால் பூச்சன் என்பதற்கு எந்த தமிழ் அகராதியிலும் பொருள் இல்லை. பூசன் கூட்டம் என்று தனியாக ஒன்று உள்ளது. 

மேற்கண்ட தமிழ் அகராதியில் உள்ளபடி பூசற்றண்ணுமை என்பதன்படி பகைவருடன் போர் புரிவதற்காக வீரரை அழைத்ததற்கு பறை கொட்டுபவரின் வழிவந்தவர்களாக இருக்க வேண்டும். ஏன் என்றால் பூசற்றண்ணுமை என்பது பின்னர் மருவி பூச்சந்தை எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்  என்பது என் கருத்து.


57.  பூசன் கூட்டம்  -   பூசன் கூட்டத்தைப் ‘பூசல்’ எனக்கொண்டு ‘பூசல் மயக்கு’, ‘பூசல் மாற்று’என்று புறத்துறைகளோடு  தொடர்புபடுத்தி எழுதியுள்ளனர் என்று புலவர் குறிப்பிடுகிறார்.வெட்சியார் கவர்ந்து சென்ற கால்நடைகளைக் கரந்தையார் மீட்க வரும்போது வெட்சியார் கரந்தையாரை வெல்லும் துறை ‘பூசல் மாற்று’ என்னும் துறையாகும். பூசல் என்பதற்கு போர் என்றும் பொருள் உண்டு. போர் செய்வதில் சிறந்து விளங்கியமையால் ‘பூசல் கூட்டத்தார்’ எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு ஆய்வாளர் “பூசன் கூட்டம் “ பூசணிக்காயால் பெயர் பெற்றது என்றும் அவர்கள் அதனால் பூசணிக்காயை சாப்பிட மாட்டார்கள் என்று கூறியுள்ளதாகப்  புலவர் குறிப்பிடுகிறார்.


எனது விளக்கம் 


பூசணிக்காயால்  பெயர் பெற்றது என்றால் பூசன் கூட்டம் எனப் பெயர் மருவாமல் பூசணிக்காய் கூட்டம் அல்லது பூசணி கூட்டம் என்றே வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இன்றும் பூசணிக்காயை  அப்பெயர் மாறாமல் அப்படியே அழைத்து வருகிறோம். எனவே பூசணிக்காயால் அப்பெயர் ஏற்பட வாய்ப்பில்லை. பூசல் என்ற சொல் போர் புரிவதைக் குறிப்பிடுவதால் பூசல் கூட்டம் என்பது பூசன் கூட்டம் என பெயர் மருவி அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.



58.  பூந்தை கூட்டம் -   வேளாளர் 96 கீர்த்திப் பாடல்,அலகுமலைக் குறவஞ்சி, வேளாளார் குலக் கும்மி, கொடுமணல் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றில் பூந்தை கூட்டப் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி இக்கூட்டம் தொன்மை வாய்ந்தது எனப் புலவர் குறிப்பிடுகிறார்.சங்க காலத்தில் பூசன் என்ற பெயர் ஆண்களுக்குப் பரவலாக பெயர் வைக்கப்பட்டிருந்தது  சங்க இலக்கியங்களில் பூதனார்,சேந்தம் பூதனார்,கொற்றன் பூதனார், பூதன் தேவனார், சேரம்பூதனார், பூதன் கண்ணனார் போன்ற பல பெயர்கள் காணப்படுகின்றன.தொல்காப்பியர் பூதன் என்ற இயற்பெயரோடு தந்தை என்ற முறைப் பெயர் சேரும்போது, பூதன் + தந்தை  பூந்தை என மாறும் என்று இலக்கணம் கூறுகிறார்.பூந்தை என்ற கூட்டப் பெயரோடு அலகுமலைக் குறவஞ்சி ‘பூந்தன் கூட்டம்’ என்று கூறுவதாகவும், பண்ணை கூட்டம், பண்ணன் கூட்டம் என்றும் கீரை கூட்டம் கீரன் கூட்டம் என்றும் மாறுவதைப் போல பூந்தை கூட்டம் பூந்தன் கூட்டம் என மாறியிருக்கலாம் என்கிறார் புலவர்.


எனது விளக்கம்  


நமது மக்களின் அக்காலத்தில் முதன்மையானது வேளாண்மையே. அப்படிப் பார்க்கையில் வேளாண் தொழிலில் ஈடுபடுவதால் மரம்,செடி, கோடி, போன்ற  

வேளாண் பொருட்களில்தான் கூட்டங்களின் பெயர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒன்றிரண்டு விதி விலக்காயிருக்கலாம் .



மேற்கண்ட படமானது தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது. பூந்தகரை என்னும் தகரைச் செடி ஒன்று  உள்ளது.இது ஒரு மூலிகை வகையைச் சார்ந்த தோல் நோய்களை நீக்கும் செடியாகும். எனவே இச்செடிகளை வளர்த்ததாலோ அல்லது இவர்களின் வயல்வெளிகளில் அதிகம் காணப்பட்டதாலோ பூந்தகரை கூட்டம் என்று பெயர் ஏற்பட்டு நாளடைவில் அச்சொல் மருவி பூந்தை கூட்டம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

 59.  பெரியன் கூட்டம்  -  கொங்கு வேளாளர் கூட்டங்களில் பெரிய கூட்டம் பெருமைமிக்க கூட்டம் ஆகும். பெரியன் என்றால் பெரியவர், மூத்தவர், தலைவர் என்று பொருள் தோன்றுவதைக் காணலாம். போருளந்தை கூட்டத்துக் காடையூர் காங்கேய மன்றாடியார் சந்ததியினரில் ‘கொங்கு 24 நாட்டுக்கும் வேணாடர் பெரிய வீட்டுக்காரராக இருந்தபடியாலே’ பெரிய கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.பெரிய கூட்டம் முதன்மையான கூட்டமாக ‘காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம்’, ‘வேணாடுடையார் சந்ததி ஆகியவற்றில் குறிக்கப்படுகிறது. கொடுமணலில் கிடைத்த தனிப் பாடலிலும் மூவேந்தர் முடிசூட்டுப் பாடலிலும் பெரிய கூட்டத்தாரே முதலாவதாகக் கூறப்படுகின்றனர். எனவே கொங்கு வேளாளர் இனத்திலயே முதல்வர், பெரியவர், முதன்மையானவர், தலைமையானவர் என்ற பொருளில் ‘பெரிய கூட்டம்’ பெயர் பெற்றது எனலாம் என்று புலவர் கூறுகிறார்.



எனது விளக்கம் 


கூட்டத்தின் பெயரிலேயே அதன் அருமை தெரிந்து விடுகிறது. புலவர் ராசு அவர்கள் விலாவாரியாக இக்கூட்டத்தின் பெருமைகளைக் கூறியுள்ளார். எனவே தனியாக அதன் பெருமைகளைக் கூற எனக்கு வழியில்லை.



60.  பெருங்குடி கூட்டம் -  சமுதாயத்தில் மேன்மையுடையவர்களும், சிறப்புப் பெற்றவர்களும், உயர்வு உடையவர்களும்,செல்வந்தர்களும், ‘பெருங்குடி’ என்று அழைக்கப்படுவர் என்பதை சிலப்பதிகாரச் செய்யுளில் வரும் ,


“இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்”

“பெருங்குடி வாணிகன் பெறுமட மகளே” 


என்ற தொடர்கள் மூலம் பெருங்குடி என்பது சிறப்பு, உயர்வு,செல்வம் போன்றவைகளை உடையவர்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது என்கிறார் புலவர்.சீவக சிந்தாமணியிலும், நாலாயிர திவ்ய பிரபந்த உரையிலும் ‘பெருங்குடியர்’ ஆட்சி உரிமைக்கு உடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. திரு.டி. எம். காளியப்பா “ உயர்வும் தொன்மைச் சிறப்பும் உடையவர்கள் பெருங்குடி கூட்டத்தார்” என்று கூறுகிறார். திரு. நல். நடராசன்  “பெருங்குடியர் தலைமையான குடியானவர்; அல்லது குடியானவர்களில் தலைமையானவர்கள்” என்று கூறுகிறார். திரு. என்.கே.ராமசாமி,”மரியாதைக்கு உரியவர்கள் பெருங்குடியர் என்று கூறுகிறார். வேட்டம்பாடி அ. பழனிசாமி “பெருங்குடியார் சோழ அரசின் சார்பில் படைத் தலைவர்களாக, பொருள் பாதுகாப்பாளராக,வரி வசூல் செய்யும் தண்டத் தலைவர்களாக, ஊராளும் காணியுடையவர்களாக வாழ்ந்தனர்” என்று கூறுகிறார். வே. ரா. தெய்வசிகாமணி கவுண்டர் தொகுத்த வேளாளர் 96  கீர்த்திப் பாடலிலும், அலகுமலைக் குறவஞ்சி, கொடுமணல் இலக்கியங்கள் ஆகியவற்றிலும் பெருங்குடி கூட்டம் சிறப்பித்துக் கூறப்படுகிறது. தெய்வங்களாக வணங்கப் பெறும் அண்ணன்மாராகிய பொன்னர்- சங்கர் வரகுன்ணாப் பெருங்குடியர் கூட்டம் என்று புலவர் கூறியுள்ளார்.


எனது விளக்கம் 


பெரியன் கூட்டம் போலவே பெருங்குடி கூட்டத்தின் பெயரிலிருந்தே அதன் அருமை, பெருமைகளைத் தெரிந்து கொள்ளலாம். வரகு என்பது பதினெட்டு வகையான தானியங்களில் சிறப்பான ஒன்று, வரகு கடும் வறட்சியைத் தாங்கி நிற்கும் பயிராகும். முளைப்புத் திறனும் அதிகம் உடையது.வறட்சி நிலத்தில் சாகுபடிக்கு ஏற்ற பயிர். திருப்பாதூர் அகத்தீசுவரர் கோயிலில் தேர்த் திருவிழா நடத்திப் பொங்கல் வைத்துப் பிரசாதம் வழங்கும்போது கோயில் மேளத்தார்களான கைக்கோளர்கட்கும், பெருங்குடி கூட்டத்தாற்கும் சில உரிமைகள் பற்றித் தகராறு எழுந்தது. மேளத்தார்கள் பெருங்குடியார் கூட்டத்தில் ஒருவர் தம் பெண் குழந்தையைப் பொட்டுக்கட்டிக் கோயிலுக்கு விட்ட பின்னர்தான் பிரசாதம் பெற வேண்டும் என்றனர். ஒரு பெண்ணை விலைக்கு வாங்கிப் பொட்டுக்கட்டி விட்டபோது அப்பெண்ணை மேளத்தார்கள் கொன்று விட்டனர். அரசரிடம் வழக்கு சென்றதால் காவலர்கள் வந்து அழைத்த போது பெருங்குடி கூட்டத்தார் வரகு அடித்துக் கொண்டிருந்தனர். அப்படியே சென்றதால் உடம்பெல்லாம் வரகுத் தவிடாக இருந்தது.வெற்றி பெற்றுக் கோயிலுக்கு வந்த பெருங்குடியரிடம் திருப்பாதூர் அகத்தீசர் ‘இனிமேல்’ வரகைத் தொடக்கூடாது’ என்று கூறி வாழ்த்தினார். இங்கு அகத்தீசரே நேரில் வந்து கூறியதாகக் கொள்ள முடியாது. யாருக்காவது அருள் வந்து வாக்கு கூறுவதை சாமியே வந்து கூறிவிட்டது என்றுதான் கூறுவார்கள். அதுபோல்தான் இதுவும். மேலும் கோயிலுக்கு பெண்ணை பொட்டுக்கட்டி விடும் பழக்கம் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் தமிழகம் வந்த பின்னர்தான் இந்நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் தமிழர்கள் ஈடுபட்டது கிடையாது. தெலுங்கர் ஆட்சி வரலாறு படித்தவர்கள் இது பற்றி நன்கு அறிவர்.


61.  பைய்யர் கூட்டம்  -  கொடுமணல் இலக்கியங்களிலும்,கல்வெட்டுகளில் மட்டுமே குறிக்கப்படும் பையர் (பைய்யர்)கூட்டம் பற்றி எவரும் எழுதவில்லை என்று கூறுகிறார் புலவர்.’பை’ என்ற சொல்லுக்கு பசுமை, இளமை, அழகு முதலிய பல பொருள்கள் உள்ளன என்கிறார் புலவர். இடிகரை,அன்னூர், சேவூர் ஆகிய ஊர்களில் மட்டும் பையர் கூட்டக் கல்வெட்டுகள் உள்ளன என்கிறார் புலவர். 


எனது விளக்கம்  


தமிழ் பேரகராதிப்படி  ‘பை’ துணித்தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்  என்றுள்ளது. அக்காலத்தில் வயலுக்கு நீர் பாய்ச்ச தோலால் செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றை  கயிற்றால் கட்டி மாடுகளைப் பூட்டி கிணற்றிலிருந்து ஏற்றம் என்று சொல்லப்படும் வகையில் நீர் பாய்ச்சினர். எனவே அப்பைகளை உற்பத்தி செய்து வந்ததால் இக்கூட்டத்திற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அல்லது பையரவு என்றால் நாகப் பாம்பைக் குறிக்கும் சொல்லாகும் . கம்பராமாயணத்தில் கூட ஒரு பாடலில் இப்பெயர் வருவதைக் காணலாம். ( பையர வல்குலார்த முள்ளமும் பளிங்கும்போல (கம்பரா. மிதிலை. 16) ) . ஆகையால் நாகப்பாம்பு இவர்களின் காட்டில் அதிகம் காணப்பட்டதாலும் இப்பெயர் பையரவு என்பது பின்னர் மருவி பைய்யர் கூட்டம் எனப் பெயர் உண்டாகியிருக்கலாம்.




 62.  பொருளந்தை கூட்டம்  -  கொங்கு வேளாண் பெருமக்களில் ‘பொருளன்’ என்னும் சிறப்பான கூட்ட முதல்வனின் தந்தை கால்வழி தோன்றிய மக்கள் ‘பொருளந்தை’ கூட்டத்தினர் எனப்பட்டனர். பொருளன்+தந்தை = பொருளந்தை என மாறும் என்று இலக்கண விதி கூறுகிறது என புலவர் கூறுகிறார்.  திரு. டி .எம். காளியப்பா, திரு. நல். நடராசன் போன்றவர்கள் இக்கூட்டத்தை ‘பிறழாந்தை’ எனக் கொண்டு  ‘ஆந்தை கூட்டத்திலிருந்து பிறழ்ந்த கூட்டம்’ என்கின்றனர்.எந்த இடத்திலும் இக்கூட்டப் பெயர் பொருளந்தை - பிறழாந்தை என்று அழைக்கப்படவில்லை. சிலர் திருத்தமாகக் கூறுவதாக எண்ணிப் ‘பொருள் தந்த கூட்டம்’ என்று கூறியும் எழுதியும் வருகின்றனர். இப்பெயர் சில ஆவணங்களிலும், இலக்கியங்களிலும் சிறுபான்மை பயின்று வருகிறது. பொருளந்தை கூட்டம், பொருள் தந்த கூட்டம்,  புரளந்தை கூட்டம், பிரளந்தை கூட்டம் , பெரளந்தை கூட்டம்,  புரளந்த கூட்டம், பெரளந்த கூட்டம், பேரிழந்தான் கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.இவை வேறு வேறு கூட்டங்கள் அல்ல.ஒரே கூட்டம்தான் என புலவர் கூறுகிறார்.திரு..டி. எம். காளியப்பா, போருளந்தை, பெரளந்தை. பேரிழந்தான் என்ற மூன்றையும் தனிதனிக் கூட்டங்களாகக் கூறுகிறார். திரு.இரா.இரவிக்குமார், பேரிழந்தான், பொருள் தந்த கூட்டத்தைத் தனித்தனிக் கூட்டங்களாகக் கூறுகின்றார். திரு.கு. சேதுராமன் பிரளந்தை, பொருளந்தை கூட்டங்களை வேறு வேறு கூட்டங்களாகக் கருதுகிறார். இவையனைத்தும் ஒரே கூட்டமாகும். மக்களின் உச்சரிப்பு வேறுபாட்டால் ஒரே கூட்டம் இவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதே உண்மையாகும் எனப் புலவர் கூறுகிறார்.தலையநல்லூர்ப்ப் பொருளந்தைக் கூட்டத்தார் உச்சரிப்புத் தவறால் தங்களைப் ‘பிராந்து கூட்டம்’ எனக் கொண்டு பருந்தை தங்கள் கூட்ட அடையாளமாகக் கொண்டுள்ளனர். 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல் எழுத்துப் பொறிப்புகளில் ‘அந்தை’ என்ற சொல் பல இடங்களிலும் வருகிறது.பொருளந்தை என்ற சொல் ஈற்றில் அந்தை என்ற சொல்லை ஏற்றதாகவும் இருக்கலாம். பல பாடல்களிலும் வேளாளர் 96 கீர்த்திப் பாடலிலும்,மரபாளர் உற்பத்திக் கும்மியிலும்,காங்கேய நாட்டுப் பாடல்களிலும் பொருளந்தை என்ற பெயரே குறிக்கப்பட்டுள்ளன. 


முழுக்காது பொருளந்தை கூட்டம்  -  பொருளந்தை கூட்டத்தாரில் ஒரு பிரிவினராகிய முழுக்காது கூட்டத்தாரை ‘முழுக்காது கூட்டத்தாரை  ‘முழுக்காது பொருளந்தை’ என்று நல்லூர்க் கல்வெட்டு, நாரணாபுரம் செப்பேடு போன்ற வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. முழுக்காது பொருளந்தை கூட்டத்தைத் தனிக் கூட்டமாக கருதும் ஆய்வாளர்கள் சிலர் இக்கூட்டத் தோற்றம் பற்றி பல காரணங்களைக் கூறுகின்றனர். இக்கூட்டத் தோற்றத்துக்கு அடிப்படைக் ஆதாரணமான புலவர் கண்ணாடிப் பெருமாள் நமக்களித்த ‘வெள்ளையம்மாள் காவியம்’என்னும் வரலாற்றுப் பாடல் முழுக்காது பிரிவு ஏற்பட்ட காரணத்தை விளக்கமாகக் கூறுகிறது.கருமாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக மழை இல்லாத் காரணத்தால் கால்நடைகட்கு மேய்ச்சல் நிலம் தேடி வந்த கருமாபுரம் பொருளந்தை கூட்ட இளைஞர் காங்கய நாட்டு நட்டூர் வனத்தில் நிறைய மேய்ச்சல் நிலம் இருப்பதைக் கண்டு நட்டூர் சேட கூட்டத் தலைவர் அனுமதி பெற்று மீண்டும் கருமாபுரம் சென்று கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்து நட்டூரில் மேய்த்தார். நட்டூர் சேட கூட்டத் தலைவருக்கு நான்கு ஆண் மக்கள். ஒரு  பெண் குழந்தை. பெண் பிள்ளை வெள்ளை நிறமாகப் பிறந்திருந்தாள். இதனை நிறப்பாளை என்று  வெள்ளையம்மாள் (அப்பெண் வெள்ளை நிறமாக இருந்ததால்) காவியம் கூறுகிறது.கருமாபுர பொருளந்தை காங்கேயன் வெள்ளையம்மாளை மணந்து கொண்டால் நட்டூரில் கால் காணி கொடுப்பதாகச சேட கூட்டத் தலைவர் கூறினார்.தன் உறவினர் அனுமதி பெற்றுக் காங்கேயன் வெள்ளையம்மாளை மணந்தார்.மாமனார் வீட்டிலேயே காங்கேயன் தங்கியிருந்ததால் தனியாகக் கால் காணி கேட்டுப் பெறவில்லை. வெள்ளையம்மாள் பெற்றோர் மரணமடைந்த பின் வெள்ளையம்மாள் உடன்பிறந்தோர் கால் காணியும் கொடுக்காமலிருக்க சதி செய்தார்கள்.ஒரு நாள் மாப்பிள்ளை காங்கேயனை அழைத்துக் கொண்டு நாடு சுற்றிப் பார்க்கச் செல்லும்போது காட்டாற்றில் காங்கேயனைத் தள்ளிக் கொன்று விட்டார்கள். வீடு திரும்பி வந்த உடன்பிறந்தோர்கள் “காங்கேயன் வேலை உள்ளதெனக் கூறி முன்னரே வந்து விட்டான் “ என்று கூறித் தேடுவதைப் போலப் பாவனை செய்தார்கள். பின்பு அவர்கள் மனைவிமார்கள் கூறியபடி வெள்ளையம்மாள் ஒழுக்கம் தவறி கருவுற்றதால் அவமானம் தாங்காமல் காங்கேயன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறி காணி கேட்ட வெள்ளையம்மாளுக்கு அளிக்காமல் தந்தை கால் காணி கொடுப்பதாகக் கூறியது எங்களுக்குத் தெரியாது, என்று கூறி உன் கணவன் ஊராகிய கருமாபுரம் போ” என்று துரத்தி விட்ட்டனர்.அப்பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வரும் வழியில் ஒரு முகமதிய சர்தார் குதிரைப் படையோடு வந்து கொண்டிருந்தார். ஒரு பெண் மூன்று சிறுவர்களோடு பயந்து ஒதுங்கி நிற்பதைக் கண்ட அவர் விசாரித்தபோது வெள்ளையம்மாள் எல்லா விபரங்களையும் கூறினால்.வெள்ளையம்மாளின் உடன்பிறந்தோரை வரவழைத்து விசாரணை செய்த பொழுது எங்கள் தந்தை காணி கொடுப்பதாகச் சொல்லவில்லை என்று கூறினார். ஊர் மக்களும் உடன்பிறந்தோரின் சாதிப்படி அவ்வாறே கூறி அவள் சொல்வது உண்மையாக இருந்தால் நாங்கள் சொல்கின்ற மூன்று சோதனைகளை ஏற்றுச் செய்ய வேண்டும் என்று சோதனைகளைப் பின் வருமாறு கூறினார். 

  1. பச்சை மண் குடத்தில் நீர் எடுக்க வேண்டும்.

  2. அந்த நீரை மண் குதிரை உருவத்தின் மேல் தெளித்தால் குதிரை கனைக்க வேண்டும்.

  3. பட்டுப்போன வறண்ட கழுமரத்தின் மீது நீர் தெளித்தால் கழுமரம் தழைக்க வேண்டும்.  


இம்மூன்று சோதனைகளிலும் வெள்ளையம்மாள் தோற்றால் கழுமரத்தில் ஏற்றப்படுவாள்.

சர்தார் “வேண்டாம், இது உன்னைக் கொல்லச் சதி “ என்று கூறித் தடுத்தார். 

ஆனால் வெள்ளையாம்மாள் அதை ஏற்காமல்  அனைத்து சோதனைகளிலும் வென்றாள். ஊரார் தெய்வீகப் பெண் வெள்ளையம்மாள் என வணங்கி மன்னிப்பு கேட்டனர். சேட கூட்டத்தார் முழுக் காணிக் கொடுப்பதாகக் கூறி ஊரைவிட்டு வெளியேறி விட்டனர்.சர்தார் கடவுள் போல் வந்து காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து நன்றி மறவோம் எனக் கூறி சர்தாரை அனுப்பி வைத்தாள். பின்னர் குலகுரு ஆலோசனைப்படி நன்றிக் கடன் ஆற்ற திட்டம் வகுக்கப்பட்டது. முகமதியர்கள் காதுகுத்தும் வழக்கம் இல்லாதவர்கள். அதுபோல் நம் மூத்த குழந்தைக்கு சிறிது காலம் காதுகுத்தாமல் வளர்த்து பின்பு முகமதியர்கள் செய்யும் சுன்னத் என்னும் சீரை செய்வது போல் காதுகுத்தும் சீரைத் திருமணச் சீரை போல் மங்கலச் சீராகச் செய்ய வேண்டும். இது முகமதியனாக இருந்து நம் இனத்துக்கு மாறுவதாக நினைவூட்டும் சடங்காக இருக்கும் என்று திட்டம் வகுத்து  பரம்பரை பரம்பரையாக இவ்வாறு தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. குத்தி விட்டால் அது குறை உடைய காது. காது குத்தாமல் இருக்கும் காதே “முழுக்காது” என்று கூறப்படும். சோதனைக்கு பின்னர்தான் வெள்ளையம்மாளுக்கு நான்காவது குழந்தை பிறந்தது. நான்கு மக்கள் பெயருக்கு ஏற்ப அவர்கள் வழிவந்த முழுக்காது பொருளந்தை கூட்டத்தாரும் நான்கு பிரிவாக அழைக்கப் படுகின்றனர்.குழந்தைகட்கு வெள்ளையம்மாள் காவியம் (1) சோமன் காங்கேயன், (2) தடியன் காங்கேயன், (3) வேண்டாங் காங்கேயன், (4) கழுவேறி காங்கேயன் எண்டு பெயர் கூறி அதற்கான காரணமும் சொல்லி முடிக்கிறாள்.ஆனால் காடையூர் காங்கேய சந்ததியினர் வெள்ளைப்பெண் வெள்ளையம்மாளை முடப்பெண் என்று கூறுவதுடன் கழுமரத்தின் கூர்மையான முனையில் கையறைய வேண்டும் ; காயம் ஏற்படக் கூடாது என்பது ஒரு சோதனையை மட்டும்  கூறுகிறது.வெள்ளையம்மாளின் மக்களை 1).கழுவறஞ்சான் காங்கேயன் 2). சோமன் காங்கேயன் 3). தடிக்காளி காங்கேயன் 4).சேனியன் காங்கேயன் என்று வரிசைபடுத்தப்படுகிறது. திரு. டி. எம். காளியப்பா மக்களை (1) கழுவில் ஏற்றும் காங்கேயன், (2).சோமன் காங்கேயன்,(3).சனியன் காங்கேயன், (4).தடியன் காங்கேயன் என்று வரிசைப் படுத்திப் பெயர் காரணமும் கூறுகிறார். 

திரு.நல்.நடராசன் சோதனைகளில் மூன்றையும் வேறுபடுத்திக் கூறுகிறார். இவர் கூறியிருப்பது எந்த காவியத்திலும், சந்ததியினர் வழியிலும் காணப்படாதது 


 

எனது விளக்கம் .


இந்த வரலாற்றில் குறிப்பாக வெள்ளையாம்மாளுக்கு செய்யப்பட்ட சோதனைகளும் அவரின் குழந்தைகளின் பெயர்களை ஒவ்வொரு ஆய்வாளரும் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் சரியாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் பொருளந்தை கூட்டத்தாரும் , முழுக்காதன் கூட்டத்தாரும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் ஐயமில்லை. முழுக்காதன் கூட்டத்தாரின் தந்தை பொருளந்தை கூட்டத்தைச் சேர்ந்தவர். முழுக்காதன் கூட்டத்தார் காது குத்துவதில்தான் அதுவும் முதல் குழந்தைக்கு மட்டும் வழக்கத்திற்கு மாறாக சில ஆண்டுகள் கழித்து குத்தப்படுகிறது என்பதில் மட்டுமே வேறுபாடு காண முடியும். பொருள் தந்த கூட்டம் என்ற பெயரும் சரியாக இருக்கலாம். பொருளன் என்பவற்றின் தந்தை பெயர் சேர்த்து பொருளந்தை என்ற பெயர் வந்தது எனப்படுகிறது. பொருளன் ஊர் நல்ல காரியம் எதற்காகவோ அல்லது உறவினர் யாருக்காவது பொருள் தேவை படும் பொழுதோ பொருள் தந்து உதவியதனால் அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பொருள் தந்த என்ற பெயர் பொருளந்தை என்று மருவி இருக்கலாம்.



63.  பொன்னர் கூட்டம்  -  கூட்ட வரலாறு எழுதிய அனைவரும் பொன்னர் கூட்டத்தை பொன்னோடு தொடர்பு படுத்திக் கூறுகின்றனர்.கர்நாடக மாநிலம் கோலார்ப் பகுதியை உள்ளடக்கிய நாடு ‘பொன்குன்ற நாடு’ எனப்பட்டது. கங்கர்கள் ஆட்சியின் போது பொன்குன்ற நாட்டுப் பகுதியிலிருந்து கொங்கு நாட்டில் குடியேறிய வேளாளர்கள் தங்கள் நாட்டின் நினைவாகப் ‘பொன்னர் கூட்டம்’ என்று தங்களைக் குறித்துக் கொண்டதாக நல்.நடராசன் கூறுகிறார். பொன் நகைகள் அணிந்தவனைக் கூட்ட முதல்வனாகக் கொண்ட மக்கள் ‘பொன்னர் கூட்டத்தார்’ எனப்பட்டனர் என்று மோகன சுந்தரம் கூறுகிறார். பொன்னின் தனிச்சிறப்பு காரணமாகப் பொன்னர் கூட்டப் பெயர் ஏற்பட்டதாக திரு.டி..எம். காளியப்பா கூறுகிறார். பொன்குன்ற நாட்டுத் தொடர்பை திரு.கு. சேதுராமனும் கூறுகிறார்.திரு. தே.ப. சின்னசாமி “பொன்குன்ற நாட்டுக்கும்  பொன்கூட்ட வேளாளருக்கும் “ தொடர்பு இல்லை. பொன்னமராவதி, பொன்பரப்பி,பொன்களத்தூர், பொன்னேரி, பொன்னம்மாபுதூர் எல்லாம் கொங்குநாட்டு வேளாளர் காணியூர்கள்தாம். சின்னப் பொன்னான், பெரிய பொன்னான்,பொன்னுசாமி, பொன்னம்மாள், பொன்னாச்சியம்மன் என்ற பெயர்களை அறியுங்கள்.நெல்லைப் பொன்னாகக் கருதி விளைவிப்பவர்கள் “பொன்னர் கூட்டத்தினர்”என்று கூறுவதாகப் புலவர் கூறுகிறார் 



எனது விளக்கம்  


தற்போதைய கர்நாடக மாநிலத்தில்  உள்ள கோலார் என்கிற ஊரில் தங்கம் கிடைப்பதாகத் தெரிந்தால் பொன்னர் கூட்டத்தினர் மட்டுமில்லாமல் மற்ற கூட்டத்தினரும் அங்கு சென்றிருக்க வேண்டுமே. எப்படி வேறு கூட்டத்தினர் போயிருக்க முடியும் என்றால் திருமண உறவுக்காக மற்ற கூட்டத்தினருடன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமல்லவா?  மேலும் அவர்கள் கொங்கு வேளாளக் கூட்டத்தினர் என்றால் அங்கு இவர்கள் செல்வதற்கு முன்பே இக்கூட்டத்திற்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமே..அத்துடன் அவ்வளவு தொலைவுக்கு திருமண உறவு கொள்வது என்பது அக்காலத்தில் அவ்வளவு சீக்கிரம் சென்று வர முடியாது. எனவே இவர்கள் தங்க வயலில் வேலை பார்த்ததினால்தான் இப்பெயர் அவர்களுக்கு வந்தது என்பது ஏற்க முடியாதது. திரு.தே.ப. சின்னசாமி அவர்கள் கூறிய கருத்து பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. 



64.  மணியன் கூட்டம் -   இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கொங்கு நாட்டு பழந்தமிழ் கல்வெட்டில் ‘மணியன்’என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் புலவர். மேலும் மணியனூர் என்றும் மணியன்பாளையம் என்ற பெயர்களில் ஊர்கள் உள்ளதாகவும் கூறுகிறார். பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் ‘காமிண்டன் மணியன் மணியனார்’ என்ற தொடர் காணப்படுகிறது. எனவே ‘மணியன்’ என்ற கூட்ட முதல்வரைக் கொண்டு மணியன் மணியன் கூட்டம் பெயர் ஏற்பட்டிருக்கலாம். மணியன் கூட்டம் கூட்டம் பேச்சு வழக்கில் ‘மானிய கூட்டம்’ என்றும் அழைக்கப் பெரும் என்கிறார் புலவர். திரு டி. எம். காளியப்பா அவர்கள் ‘மணி’ என்பது நெல் முதலிய தானியங்களைக் குறிக்கும். மணிகளை விளைவித்தவர்கள் மணியன் கூட்டத்தார் எனப் பெயர் பெற்றனர் என்று கூறுகிறார்.அவரே ‘மணியம்’ என்பது ஊர் ஆட்சி செய்யும் உரிமையையும், மணியக்காரர் என்பது அவ்வாறு ஆட்சி செய்பவர்களையும் குறிக்கும்.மணியம் செய்தவர்கள் மணியன் கூட்டத்தார் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறியுள்ளதாக புலவர் கூறுகின்றார். திரு. கு. சேதுராமன் அவர்கள் ‘மணியம்’ என்பது அதிகாரப் பெயர். அதிகாரம் செய்தவர்கள் மணியன் கூட்டத்தார் என்று கூறுகிறார்.கோடத்தூர் மணியன் கூட்டத்தார் வவ்வாலைக் கூட்டக் குறியாக கொண்டுள்ளனர். கோடதூர் ராசாக் கோயிலில் வவ்வாலை அழைக்கும் சடங்கு இன்றும் நடைபெறுகிறது. சில ஊர் மணியன் கூட்டத்தார் மணிப்புறாவை கூட்டக் குறியாகக் கொண்டுள்ளனர். திரு டி. எம். களியப்பாவும், திரு.கு. சேதுராமனும் ‘மணியன்’ என்பதற்கு வவ்வால் என்று பொருள் கூறி வவ்வாலை அடையாளச் சின்னமாக உடையவர்கள் மணியன் கூட்டத்தார் என்று கூறுகின்றனர்.மற்றொருவர் பச்சை,நீலம் போன்ற ‘மணிக்கற்களை’ அணிகலன்களாக அணிவதில் பெரும் விருப்பம் உடையவர்கள் ‘மணியன் கூட்டத்தார்’ என்று கூறுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார். மணி என்பதற்குச் சிறப்பு பொருளும் உண்டு. ‘மணியான பையன்’ மணியாக வேலை செய்கிறான்’ என்ற இடங்களில் சிறப்பு என்ற பொருளில் மணி என்ற சொல் வருகிறது. எனவே சிறப்புடையவர்கள் மணியன் கூட்டத்தார் என்றும் கூறுகின்றனர். தமிழ்ப் பேரகராதி ‘மணியம்’ என்பதற்கு கிராமம், கோயில், மடம் இவைகளை நிர்வாகம் செய்து மேற்பார்வையிடும் தொழில் என்று கூறுகிறது. தொல்காப்பிய உரையிலேயே ‘மணியகாரன். என்ற சொல் வருகிறது. கொங்குச் சமுதாயத்தில் ‘மணியகாரர் உயர்ந்த நிலையில் உள்ளவராகவும்,மணியம் என்பது பொறுப்பான உயர்ந்த தொழில் என்றும் கருதப்பட்டது.கொங்கு நாட்டில்தான் பல வண்ண மணிக்கற்கள் விளைகின்றன.உழும்போது கலப்பைக் கொலுவில் மணிக்கற்கள் வெளிப்படும் என்று பதிற்றுப்பத்துக் கூறுகிறது. மணிக்கற்களைக் கொண்டு மணிகள் என்னும் அணிகலன்கள் செய்வோரும் மணியன் என்று அழைக்கப் பட்டிருக்கலாம் எண்று புலவர் எழுதியுள்ளார்.


எனது விளக்கம் 


மணிக்கற்களை செய்வதினால் மணியன் என்று கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்கலாம் எண்று புலவர் கூறியுள்ளார். மேலும் திரு.டி. எம். காளியப்பாவும், திரு.கு. சேதுராமனும்,மணியன் என்பதற்கு வவ்வால் என்று பொருள் உள்ளதாகக் கூறுவது தவறு. தமிழ் பேரகராதியில் மணி என்பதற்கு ஒளி வீசும் வைரம் போன்ற கல் என்றும் மணிப்புறா என்று பொருள் கூறுகிறது. நான் ஏற்கெனவே கூறியபடி வயல்களை ஒட்டிய காட்டு மரங்களில் மணிப்புறாக்கள் கூடு கட்டி வாழ்ந்திருக்க வேண்டும். எனவே அக்கூட்டத்திற்கு மணிப்புறா கொண்டு மணியன் கூட்டத்தினர் எனப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடையாளமாகத்தான் சில ஊர்களில் மணிப்புறாவை கூட்டத்தின் கூட்டக் குறியாகக் கொண்டுள்ளனர் என்று புலவர் குறிப்பிட்டுள்ளதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மணியம் தொழில் செய்து வந்த நம்மவரின் தொழில் சோழிய வேளாளர், பிராமணர் போன்றோர் கைகளுக்கு எப்படிச் சென்றது என நம்மால் விளக்க முடியுமா? எனவே மணிப்புறாக்களின் மூலமாகவே மணியன் கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.



65. மயிலன் கூட்டம் -  இலக்கியங்களிலோ, ஆவணங்களிலோ அதிகம் பேசப்படாத கூட்டம் மயில கூட்டம். மயில்,.மயில கூட்டத்தாரின் அடையாளச் சின்னமாக திரு.டி.எம்.காளியப்பா அவர்கள் கூறியுள்ளார். திரு.இரா. இரவிக்குமார் மயிலைக் காளைகளைத் தன் வசமாக்கும் ஆற்றல் பெற்ற கூட்டத்தார் ‘மயிலைக் கூட்டம்’ எனப்பட்டு ‘மயில கூட்டம்’ என ஆயினர் என்ற பொருளில் எழுதியுள்ளார்.திரு. தே.ப. சின்னசாமி காடை,குயில்,செம்போத்து எனப் பறவைகள் பெயரால் கூட்டம் அமைந்தது போல மயிலின் பெயரால் கூட்டப் பெயர் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். கொங்கு வேளாளர் மகளிர் மயில் போன்ற சாயலில் இருப்பார்கள் என்றும் மயிலைப் போல நடப்பார்கள் என்றும் திரு. தே.ப. சின்னசாமி கூறுகிறார். திரு.கு.சேதுராமன் எருது வகைகள் பில்லை, காரி, மயிலை என்பன. அவற்றுள் மயிலைக் காளையை மிகவும் இராசியுடையது என்று கருதி மதிப்பவர்கள், வளர்த்து பாதுகாப்பவர்கள் மயிலை கூட்டத்தார் என்று கூறுகிறார். கொடுமணல் இலக்கியம் இக்கூட்டத்தை “மயிலை கூட்டம் என்றே அழைக்கின்றது.ஆனால் தனிப் பாடல்கள் ‘மயில கூட்டம் என்றே குறிப்பிடுகிறது.இக்கூட்டத்தை ‘மயிலர் கூட்டம்’ எனக் குறிக்கும் நல. நடராசன் மயிலை என்பது இங்கு போர் முறைகளில் ஒன்றாகிய பசுநிறை கவர்தல் (ஆடு, மாடுகளைப் பிடித்துக் கொண்டு செல்லுதல்) என்ற வெட்சித் திணையைக் குறித்தது.இத்தகைய போர் முறையில் சிறந்த வேளாளர்கள் என்ற பொருளில் இவர்களுக்கு மயிலர்  என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.அல்லது உழவுக்கு பயன்படும் பில்லை, காரி, மயிலை ஆகிய வகை எருதுகளில் மயிலைக் காளைகளை மிகுதியாகக் கொண்டிருக்கும் வேளாளர்கள் என்ற பொருளில் மயிலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்’ என்று கூறுகிறார்.



எனது விளக்கம்  



திரு. தே.ப. சின்னசாமி அவர்கள், காடை, குயில், செம்போத்து, என பறவைப் பெயரால் கூட்டங்கள் அமைந்தது போல மயில் பறவையைக் கொண்டு இக்கூட்டத்திற்கு பெயர் அமைந்தது என்பதே சரி. இவர்களின் வயல்களை ஒட்டியிருந்த காடுகளில் மயில்கள் அதிகம் காணப்பட்டிருக்கலாம். அதனால் இவர்களை மயில்  கூட்டத்தார் என்று பெயர் ஏற்பட்டு பின்னர் மருவி மயிலன் கூட்டம் என்றாகியிருக்கலாம். அக்காலத்தில் எல்லா கூட்டத்தினரும் காளைகளை வளர்த்து வந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காளையை மிகவும் இராசியானது என்று அறிய சில காலம் பிடிக்கும். அப்படி இருக்கையில் மயிலைக் காளையைக் கொண்டு இப்பெயர் ஏற்பட வாய்ப்பில்லை என்பது என் கருத்து.


66.  மலையர் கூட்டம் -   வேளாளர் 96 கீர்த்திப் பாடலிலும், கல்வெட்டுகளில் மட்டுமே மலையர் கூட்டம் குரிக்கப்பட்டிருப்பதால் எவரும் தங்கள் வரலாற்றில் இக்கூட்டம் பற்றிக் குறிப்பிடவில்லை என்கிறார் புலவர்.  மலை வளங்களைப் பெற்றவர்களாகவோ அல்லது மலையில் உள்ள சமவெளிகளில் வேளாண்மை செய்தவர்களாகவோ இருந்திருக்கலாம் என்கிறார் புலவர். சமவெளியில் மட்டுமின்றி மலைக்கும் உரியவர்களாகவோ மலையர் கூட்டத்தினர் இருந்திருக்கலாம் என்கிறார் புலவர்.மலைய கூட்ட வேளாளர் தொடர்பான கல்வெட்டுகள் கவசை, கோயில்பாளையம் , இடிகரை, கோயம்புத்தூரிலும், கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணியுரிமை மலையர் கூட்டத்தார் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. 



எனது விளக்கம் 


கோயம்புத்தூரைச் சுற்றி குன்னூர், அதற்கு மேல் ஊட்டி , வால்பாறை போன்ற மலைப்பகுதிகள் நிறைய காணப்படுகின்றன. எனவே அங்குள்ள சமவெளிகளில் வேளாண்மை செய்து வந்தவர்கள் மலையர் கூட்டத்தினர் என்று புலவர் சொல்வது சரியே.



67.  மழுவர் கூட்டம்   -  ஓதாலர் அழகுமலைக் குறவஞ்சியில், 


‘பயிரன் பரமன் பஞ்சமன் பூதியன் 

உயர்மழு வழகர்உறுகுல விரதர்’


எனக் குறிக்கும் இடத்தில் ‘மழுவழகர்’ என்ற கூட்டம் குறிக்கப்படுகிறது. மழுவ கூட்டத்திற்கு உயர் என்று முன்னும் அழகர் என்று பின்னும் சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் புலவர். திரு..டி.எம். காளியப்பா “கொங்கரின் பழைய பட்டயத்தில் ‘மழு அழகர்’கூட்டம் குறிக்கப்பட்டுள்ளது. ‘அழகர்’ தனிக்கூட்டம் ‘மழுவர்’ தற்சமயம் தனிக்கூட்டம்” என்று கூறியுள்ளார். இக்குறவஞ்சியில் அழகன் கூட்டம் தனிக்கூட்டமாக வேறு இடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ‘மழுவழகர்’ கூட்டத்திலிருந்து பிரிந்தது அல்ல அழகர் கூட்டம் என்கிறார் புலவர். திரு. இரா. இரவிக்குமார் ‘மழுவழகர் கூட்டம்’ மழுவர் கூட்டம்’ இரண்டையும் தனித்தனிக் கூட்டங்களாகக் கொள்ளுகிறார் அழகன் கூட்டத்திலிருந்து மழுஅழகர் கூட்டம் பிரிந்திருக்கலாம் என்றும், மழு என்பதற்கு உயர்ந்த வீரன், எதற்கும் அஞ்சாதவன், பாதுகாவலன் என்றம் பொருள் கூறுகிறார். தொப்பம்பட்டி தேன்மொழியம்மனைக் காணியாட்சி தெய்வமாக உடையவர்கள் கணக்கன், காடை, மழுவ கூட்டம் ஆகிய மூன்று கூட்டத்தார் ஆவார். ஓதாளர் அலகுமலைக் குறவஞ்சியில் கூறும் மழுவழகர் கூட்டமே மழுவன் கூட்டமாகும்.’மழு அழகன்’ என்பதே பின்னாளில் மழுவன் எனத் திரிந்திருக்க வேண்டுமெனத் திரு.நல்.நடராசன் கூறுகிறார்.மூவேந்தர்கட்கு படைத்தளபதிகளாய், குறுநில மன்னர்களாய் புகழுடன் வாழ்ந்த கொங்கு வேளாளர்கட்குப் போர்த்தொழில் அடிப்படையில் ‘மழுவன் கூட்டம்’ என்ற  பெயர் ஏற்பட்டதாகக் கருதுவதில் தவறில்லை என்கிறார் புலவர்.



எனது விளக்கம் 


தமிழ்ப் பேரகராதியில் மழுவன் என்றால் .அஞ்சாதவன், பிடிவாதமுள்ளவன்,

ஊர்காப்போன் என்று பொருள் கூறுகிறது, எனவே புலவர் கூறியபடி இக்கூட்டத்தினர் படைத்தளபதிகள், குறுநில மன்னர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.


68.  மாடை கூட்டம்  -   கூட்ட வரலாறு எழுதியவர்கள் எல்லோராலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட கூட்டங்களில் மாடை கூட்டம் முதன்மையானது. திரு.டி.எம். காளியப்பா “ஒருவகைப் பொன்னுக்கு” மாடை எனப் பெயர்.மாடைப் பொன் அணிந்தவரின் கால் வழியாக வந்தவர்கள் ‘மாடை கூட்டத்தினர்’ எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளதாகப் புலவர் குறித்துள்ளார். திரு.நல்.நடராசன் ‘மாடை கூட்டம்” என்ற பெயர் உழவுத் தொழிலை அடிப்படையாகப் பிறந்தது. ‘மா’ என்பது மாடு,குதிரை,யானை முதலிய விலங்குகளைக் குறிக்கும் பொதுப் பெயர். காளை மாடுகளைப் பயன்படுத்துபவன், பசு மாடுகளைப் பேணுபவன்,என்ற பொருளில் மாடை கூட்டம்  (மா, மாடு, மாடை)என்று தோன்றியிருக்க வேண்டும்.அல்லது “மடை என்ற சொல் மதகு வாய்க்கால்,நீரணை முதலிய உழவுத் தொழில் தொடர்பான பொருள்களைத் தருவதால் மடை என்பதே மாடை எனவும் வழங்கியிருக்கலாம்” என்று எழுதிய்ள்ளார். திரு. மோகனசுந்தரம், திரு.காளியப்பா அவர்கள் எழுதியதை அப்படியே தந்துள்ளார். திரு.கு.சேதுராமன் “பொன்னை ஆபரனங்களுக்குத் தகுந்தவாறு மாற்றுச் சேர்த்து மாடைப் பொன் தயாரிப்போர் மாடைகள் எனப்படுவர்.  திரு. வி. இராமமூர்த்தி “மாடை” என்பது சோழர்-பாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்த ஒருவகைப் பொன் காசாகும். பராந்தகன் மாடை, குலோத்துங்கன் மாடை என்ற பெயர் காண்க.தங்கத்தில் ஏதாவது மாற்றுச் சேர்த்து மாடைப் பொன் தயாரிப்பதில் வல்லவர்களாக மாடை கூட்டத்தாரின் முன்னோர்கள் இருந்திருக்கக் கூடும்” என்று கூறுகிறார். திரு.இரா. இரவிக்குமார் இக்கருத்தையே வழிமொழிகிறார். ‘மாடை’ என்பதற்கு உளுந்து என்று பொருள் உண்டு.அதனால் உளுந்து பயிரிடுவதில் மாடை கூட்டத்தார் சிறந்திருந்ததால் இக்கூட்டப் பெயர் பெற்றனர். மாடப்புறாவை அடையாளச் சின்னமாகக் கொண்டவர்கள் மாடை கூட்டத்தினர் என்றும் சிலர் கூறியுள்ளனர். பொன்னாலும், பொன் நாணயத்தாலும் பெயர் பெற்ற கூட்டத்தினர் ‘மாடை கூட்டத்தார்’ என்ற கருத்தே வலியுடைத்ததாகும். திரு.தே..ப.சின்னச்சாமி “மாடு - செல்வம்:மாடு + ஐ = மாடை,   அழகிய மாடு வளர்த்தவர்கள்,அதனைச் செல்வமாகக் கொண்டவர்கள் “மாடை கூட்டத்தினர்” ஆயினர் என்று கூறுகிறார். 


எனது விளக்கம் 


தமிழ் இணையக் கல்விக் கழகப் பேரகராதியில் மாடை என்பதற்கு அரை வராகன் (தங்கம்) என்றும் பத்துக் குன்றி எடையுள்ள பொன் நாணய வகை என்றும்  மற்ற அகாதியிலும் மாடை என்ற சொல்லுக்கு பொன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகப் பேரகராதியில் மாடை என்பதற்கு கீழ் நோக்கி வளைந்திருக்கும் கொம்புடைய மாடு என்ற பொருளும் வருகிறது. எனவே பொன் உருவாக்குவதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்குவதில் நிறைய சிரமங்களும் கிடைக்கும் இடங்களும் அரிதான ஒன்று என்பதாலும் பொன் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டவர்கள் என்று உறுதியாகக் கூற இயலாது. கீழ் நோக்கி வளைந்த கொம்புகள் நிறைந்த காளைகள் உடையவர்களாக இருந்ததால் இக்கூட்டத்திற்கு மாடை என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.



69.  முத்தன் கூட்டம்  -  ஒன்பது மணிகளில் ஒன்றான முத்தோடு தொடர்புடையவர்களாக முத்தன் கூட்டத்தினர் எனக் கருதப்படுகின்றனர்.

கடற்கரை முத்துக்களை கொங்கு நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமக்கள் வழிவந்தவர்களாக இருக்கலாமென்று புலவர் எழுதியுள்ளார்.திரு.டி..எம். காளியப்பா முத்தன் என்னும் தமிழ்ச் சொல், சிறந்தவன், உயர்ந்தவன், ‘பளிச்’ என்று மேலான நிலையில் இருப்பவன் என்று பொருள் தரும். முத்துசாமி (காரியுண்டிக் கடவுள்) வழியாக ஏற்பட்ட பெயராகவும் இருக்கலாம் என்று கூறுகிறார். இதை அப்படியே மோகனசுந்தரம் வழிமொழிந்துள்ளார். ”முத்துக்களால் ஆன அணிகலன்களை மிகவும் விரும்பி அணியும் இயல்பினர். அதனால் இவர்கள் முத்தர் -  முத்தன் எனப் பெயர் பெற்றனர்” என திருப்பூர் பழநிச்சாமிப் புலவர் தம் ‘கொங்குச் செல்வி ‘ என்னும் நூலில் எழுதியுள்ளார். திரு, நல். நடராசன் ‘முத்தன் கூட்டம் உழவுத் தொழிலால் பெயர் பெற்றது. முத்து என்பது ‘ஆமணக்கு,பருப்பு போன்றவைகளைக் குறிக்கும் பொதுப் பெயர். இவ்வாறு இவைகளை விளைவிக்கும் உழவர்கள் இப்பொருளோடு தொடர்பு கொண்டு முத்தன் கூட்டம் என்று பெயர் பெற்றனர் என்று கூறுகிறார். திரு.தே.ப.சின்னசாமி வெள்ளாளர்களில் முத்தாக முதன்மையாக வாழ்ந்தவர்கள் முத்தன் கூட்டத்தார் என்று கூறியுள்ளார்.



எனது விளக்கம் 


‘முத்தன் கூட்டத்தார்’ கடற்கரை முத்துக்களை கொங்கு நாட்டில் அறிமுகப் படுத்தியவர்களாகக் கருதப்படுகிறார்கள் எனப் புலவர் எழுதியுள்ளார். மற்ற தமிழ் அறிஞர்களோ சிறந்தவன் என்றும், ஆமணக்கு,பருப்பு,போன்றவைகளை விளைவிப்பவர்கள் ‘முத்தன் கூட்டத்தார்’ என்றும் பல கருத்துகளைக் கூறியுள்ளனர். அகராதிகளில் முத்தர் என்பதற்கு எங்கும் உயர்ந்தவன் என்றோ ஆமணக்கு, பருப்பு போன்றவைகளோடு  தொடர்புபடுத்தி பொருள் இல்லை. கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு என்று தனியாக பரதவ (மீனவ) குலம் உள்ளது. ஆனால் தமிழ் விக்சனரியில் முத்தர் என்றால் திடர் என்று பொருள் கூறுகிறது. திடர் என்றால் திடமானவர், வலிமையானவர் என்ற பொருள் வரும். ஆகவே திடமாகவும் வலிமையாகவும் விளங்கியவர்கள் என்பதால் இக்கூட்டத்திற்கு ‘முத்தன் கூட்டம்’ எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.  


70.  மூலன் கூட்டம்  -  மூலன் என்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்த தொன்மையான பெயர். மூலனார், மாமூலனார், ஆவூர் மூலன்கிழார் , ஐயூர் மூலன் கிழார் என்பன போன்ற பல பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காணுகின்றோம்.ஆதி சைவ நூலாகிய திருமந்திரத்தை எழுதியவர் திருமூலர் . திரு என்பது சிறப்பு அடைமொழி.அவர் பெயர் மூலர் என்பதேயாகும். திரு. நல். நடராசன் கொங்கு வேளாளரில் “மூத்த குடியினர், முதன்மைக் குடியினர்” மூல கூட்டத்தார் என்று கூறுகிறார். மூல கூட்டத்தாரில் ‘கவறை மன்றாடி’ என்பவர் ஒருவர் இருந்ததாகவும், அவர் தனக்குரிய அன்னக்கொடியை ஏற்றினார் என்று கூறப்படுகிறது.பழைய கோட்டைப் பயிரக் கூட்டச் சர்க்கரை மன்றடியார்க்கும் அன்னக்கொடி உண்டென்று கூறப்படுகிறது. திருவாளர்கள் நல். நடராசன், மோகனசுந்தரம், தே.ப.சின்னசாமி ஆகியோர் பழைய கோட்டையைப் பயிர கூட்டத்தார் மூல கூட்டத்தாரைத் தாக்கி அன்னக் கொடியைக் கைப்பற்றியதாகவும் அதனால் மூல கூட்டத்தார் தங்கள் காணியூராகிய மூலனூரை விட்டு வெளியேறிக் கொங்கு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று விட்டனர் என்றும் கூறுகின்றனர்.அவர்கள் கூறியபடியிருந்தால் மூலனூரில் பயிரன் கூட்டத்தார் காணி கொண்டிருக்க வேண்டும். ஆனால் அக்கூட்டத்தினர் காணியாளராக அங்கு இல்லை. கொங்கு வேளாளர்களில் போர் செய்து மற்ற கூட்டத்தாரின் காணிகளைக் கைப்பற்றியதாக ஒரு ஆதாரம் கூட இல்லை. மூலன், பயிரன் ஆகிய இரு கூட்டத்தினரும் அன்னக்கொடியைத் தங்கள் கொடியாகக் கொண்டிருக்கலாம் .திரு. தே. ப. சின்னசாமி கோயிலில் முதன்மைத் தெய்வத்தை ‘மூலவர்’ என்றும் முதல் நூலை ‘மூல நூல்’ என்றும் கூறுகிறோம் . அது போல திருமந்திரம் எழுதிய திருமூலர் கொங்கு வேளாளரில் மூல கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் வழிவந்தவர்கள் மூல கூட்டத்தார் என்றும் கூறுகிறார். 



எனது விளக்கம்  


திருமந்திரம் நூல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் கொங்கு வேளாளர்களின் பண்பாடு அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது. எனவே திரு. தே.ப. சின்னசாமி அவர்களின் கூற்றுப்படி திருமூலர் வழி வந்த கூட்டம் என்பது பொருந்தாது. கூட்டங்களிலே முதன்மையாகத் தோன்றிய கூட்டமாக இது இருந்திருக்கலாம். எனவே இக்கூட்டத்திற்கு மூலன் கூட்டம் என்று பெயர் உண்டாகியிருக்கலாம் அல்லது எந்தப் பயிரை விளைவிக்க வேண்டும் என்றால் அதற்கான மூலம் விதைதான். எனவே பயிரிடுவதற்கு பலவகையான விதைகளைச் சேமித்து வைத்து மற்றவர்களுக்கு விலைக்கோ இலவசமாகவோ கொடுக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். பயிருக்கு மூலமான விதைகளைக் கொடுப்பதினால் மூலன் கூட்டம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.



71.  மேதி கூட்டம்   -  மேதி என்ற சொல்லுக்கு எருமை என்ற பொருள் உண்டு. அதனால் எருமைக் கூட்டம் என்றும் அழைக்கப்பெறும். எருமை என்ற பெயரிலும், எருமையூரன்  என்ற பெயரிலும் சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் வாழ்ந்துள்ளனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடு எதிர்த்துப் போர் செய்து தோற்ற ஐம்பெரும் வேளிருள் எருமையூரன் ஒருவன்.எருமை வெளியனார் என்ற புலவரும் அவர் மகன் கடலானார் என்ற புலவரும் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.அவர்களை எருமை நாட்டு வெளியம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், எருமை வெளி என்பதே ஊர்ப் பெயர் என்று கூறுவார். எருமையூர் இன்றைய மைசூர் என்றும் ஆய்வாளர்கள் கூறுவதாகப் புலவர் குறிப்பிட்டுள்ளார். மேதிக் கூட்டத்தாரின் ஆதிக்காணி கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் படைவீடு ஆகும். அங்கிருந்து மேல்கரைப் பூந்துறை நாட்டுப் பெருந்துறைக்கு வந்து கொங்குச் செட்டியாரிடம் பெருந்துறையை விலைக்கு வாங்கிக் குடியேறினர். படைவீட்டிலிருந்து மேதி கூட்டத்தாரில் ஒரு பங்காளிக் குடும்பத்தினர் வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டானது. அவர்கள் அங்கிருந்து தன் பங்காளிகளோடு வெளியேறிப் பெருந்துறையில் காணியை விலைக்கு வாங்கிக் குடியேறினர்.படைவீட்டில் வாழ்ந்த காடை கூட்டத்தார் ஒருவர் ‘இங்கு முன்பு மேதியன் கூட்டத்தார் வாழும் போது ஊர் செழிப்பாக இருந்தது. அவர்கள் போன பின் ஊரே பாழாகி விட்டது’ என்று கூறினாராம். நசியனூரில் கண்ண கூட்டம் செங்கோடன் நல்லதம்பிக் கவுண்டர் என்பவர் இருந்தார். அவருக்கு ஆயி அம்மாள் என்ற வெள்ளை நிறப் பெண் மகள் இருந்தாள். அவள் வெள்ளை நிறமாக இருந்ததால் எவரும் மணம் செய்து கொள்ள முன் வரவில்லை.வெள்ளைப்பெண் ஆயி அம்மாளை பூந்துறை காடை கூட்ட வாரனவாசிக் கவுண்டர் மகன் தம்பி நல்லய கவுண்டன் மனம் செய்து கொண்டார். அதற்காக மேதிக் கூட்டப் பழனிசாமி கவுண்டருக்கு 500 பூநாகரம் கொடுத்து பெருந்துறையில் பாதிக் காணியை விலைக்கு வாங்கி தன் மருமகன் பூந்துரைக் காடை கூட்டத் தம்பி நல்லய கவுண்டருக்குச் சீதனமாகக் கொடுத்தார். தம்பி நல்லய கவுண்டர் பெருந்துறை காடை என்று அழைக்கப்பட்டார். பெருந்துறையின் முதல் காணியுரிமை மேதிக் கூட்டத்தாருக்கு என்றும், இரண்டாவது உரிமை காடை கூட்டத்தாருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. கோயில்களிலும் முப்பாட்டு உரிமை மேதி கூட்டத்தார்கும், பிற்பாடு காடை கூட்டத்தாருக்கும் என்று முடிவாகியது. “மேதி கூட்டத்தாரும், காடை கூட்டத்தாரும் அண்ணன் தம்பி போல கூடிப் பிழைக்கவும்” என்று செப்பேட்டில் எழுதியபடி இன்றும் பெருந்துறையில் மேதி - காடை கூட்டத்தார் வேறு வேறு கூட்டமாக இருந்தாலும் இரு கூட்டத்தாருக்குமிடையே திருமண உறவு வைத்து கொள்வதில்லை. 



எனது விளக்கம் 


மேதி என்பதற்கு எருமை என்ற பொருள்தான் பொதுவாக அகராதிகளில் காணப்படுகிறது. எனவே புலவர் அவர்கள் கூறியபடி மேதி கூட்டம் என்பது எருமை கூட்டம் என்பது சரியே .



72.  வண்ணக்கர் கூட்டம்  -  கொங்கு வேளாளர்களில் மிகவும் சிறப்பானதோர் கூட்டப் பெயரை உடையவர்கள் வண்ணக்கன் கூட்டத்தினர். பழங்காலத்தில் நாணயம் , மணிக்கற்கள்  ஆகியவைகளைப் பரிசோதிப்பவர் ‘வண்ணக்கன்’ என்று அழைக்கப்பட்டதாக புலவர் கூறுகிறார்.சங்க காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்களாக வீற்றிருந்து கவிதைகள் பல புனைந்துள்ளனர். 


‘வண்ணக்கன் சாத்தனார்’ 

‘வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தன் (புறம் -172)’

‘வண்ணக்கன் சோருமங் குமரனார் ‘

‘புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான்’ 

‘விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்’ 


போன்றோர் சங்கப் புலவர்கள் எனப் புலவர் கூறுகின்றார். ஈரோடு அருகே அறச்சலூர் மலைக் குகையில் மணியவண்ணக்கன் இசை, நாட்டிய அடைவு எழுத்துக்களை 2000 ஆண்டுகட்கு முன்பே பொறித்துப் புகழ் பெற்றார். இந்தியாவில் கிடைக்கும் இசைக் கலைத் தொடர்பான கல்வெட்டுகளில் இதுவே பழமையானது எனப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.நாணயம் அடிக்கக் கொடுக்கும் கூலி வண்ணக்கக் கூலி எனப்பட்டது.பரிசோதனை செய்பவன் ‘வண்ணக்கக் கரணத்தான்’. ‘திண்ணிய உடம்பும், அழகிய உடம்பும் உடையவராய் இருத்தலின் இவர்கள் வண்ணக்கர் கூட்டத்தார் என்று அழைக்கப்பட்டனர்’ என்று கூறியுள்ள க. பலனிசாமிப் புலவர், “இவர்கள் யாரையும் போரில் வணக்கி வந்தவர் ஆதலின் வணக்கர் என்று அழைக்கப்பட்டு வண்ணக்கர் ஆயினர்” என்றும் கூறியுள்ளார்.


எனது விளக்கம் 


தமிழ் இணையவழிக் கல்வி பேரகராதிப்படி வண்ணக்கன் என்பதற்கு பொருள் கட்டி பொற்காசு, பொற் கட்டிகளை (நிறுத்தும், உரைத்தும்) குறிப்பு அறிபவன் என்று கூறுகிறது. பொற்காசை அல்லது பொற்கட்டியை உரைத்துப் பார்த்து அதன் மாற்று வண்ணத்தால் (நிறத்தால்) காசின் அல்லது பொற்கட்டியின் தரத்தை நோக்குபவன். சரியானவற்றின் மேல் முத்திரை இடுவதும் இவர்கள் பொறுப்பு ஆகும். சங்ககாலப் புலவராகிய வடம வண்ணக்கன் தாமோதரனார் (புறம் 172) காசு நோட்டக மரபினர் என்பர். எனவே புலவர் திரு. ராசு அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் சரியானது.



73.  வில்லி கூட்டம்   -  சேர மன்னர்கள் சின்னம் வில்.அதனால் சேரர்கள் வில்லியர் எனப்பட்டனர். வில்லி கூட்டத்தார் சேரரோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம். புறநானூற்றுப் பாடல் ஒன்று (379)  ‘ஓய்மான் வில்லியாதன்’ என்ற தலைவனைப் புகழுகிறது. ஆதன் என்பது சேர மரபினர் வைத்துக் கொள்ளும் பெயர்களில் ஒன்று.  நெடுஞ்சேரலாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பன சேரர் பெயர்கள். ஓய்மான் வில்லியாதன் சேரர் மரபினராக இருக்கக் கூடும் என்று புலவர் மேற்கண்டவைகளைப் பதிவிட்டுள்ளார். திரு. தே.ப.. சின்னசாமி கவுண்டர் அவர்கள் வில்லாற்றல் மிக்கவர் வில்லி கூட்டத்தார். பொன்னர், சங்கர், தீரன் ஆகியோரும் வில்லாற்றல் மிக்கவர்கள் தாம்..வில்லி பாரதம் பாடியவர் வில்லி கூட்டத்து வெள்ளாளரே என்று பதிவிட்டுள்ளார். நாமக்கல் வட்டத்தில் வில்லிபுரம் என்று ஊர் உள்ளது என்றும், வில்லிக் கூட்டத்து வேலக்கவுண்டர் பற்றி குமாரமங்கல ஆவணம் கூறும் என்றும் பதிவிட்டுள்ளார். 



எனது விளக்கம் 


புலவர் திரு. ராசு அவர்கள் எழுதியுள்ளபடி வில் தொடர்பு உடையவர்கள் வில்லிக் கூட்டத்தினர் என்பது சரி. ஆதன் என்பது சேர மன்னர்கள் வைத்துக் கொள்ளும் பெயர் என்பதால், ‘ஓய்மான் வில்லியாதன்’ என்ற தலைவரைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வருவதைக் கொண்டு உறுதிப் படுத்தியுள்ளார்.எனவே புலவர் அவர்களும் திரு. தே. ப. சின்னசாமி கவுண்டர் அவர்களும் குறிப்பிட்டுள்ளது சரியே.


74. .விலையன் கூட்டம்  -   விலை என்ற சொல்லுக்கு உயர்மதிப்பு என்ற பொருள் உண்டு. கொங்குச் சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர்கள், மதிப்புடையவர்கள் என்ற பொருளில் இக்கூட்டம் பெயர் பெற்றிருக்கலாம். திரு. தே.ப. சின்னசாமி அவர்கள்,இது விளையன் கூட்டம் ஆகும். விலையன் கூட்டம் ஆகாது வெள்ளாளன் தன் உழைப்பால் நவ தானியங்களையும் விளைய வைக்கின்றானே. அதனால்தான் விளையன் கூட்டம் என்றனர். பிற விளக்கம் தேவையில்லை. விலை போகாத வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. அதிகாரம், செல்வம், ஆட்சிக்கு வெள்ளாளர் விலையன் ஆவது இல்லை. இவ்வாறு சின்னசாமி அவர்கள் பதிவிட்டுள்ளார். 

எனது விளக்கம் 


பொதுவாகவே நம் இனத்தினர் வேளாண் தொழில்தான் முதன்மையாகச் செய்து வந்தனர். இக்கூட்டத்தினர் மட்டுமே பயிர்களை விளைய வைத்ததாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. திரு. தே.ப. சின்னசாமி அவர்கள் முதலில் விலையன் கூட்டம் என்ற பெயர் இதற்கு கிடையாது. தன் உழைப்பால் நவதானியங்களை விளைய வைக்கின்றதனாலே இவர்களுக்கு விளையன் கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார். ஆனால் பின்பு ஆட்சி அதிகாரத்திற்கோ செல்வம் போன்றவைகளுக்கு விலை போவது இல்லை என்கிறார். இதில் எது சரி. விழைவது என்பது, முன் வருவது, அல்லது விருப்பப்படுவது என்று பொருளாகும். பொதுவாக ஒரு நல்லதை செய்வதற்கு முன் வருபவனை நாம் இந்த நல்லதை செய்வதற்கு அவன் விழைகிறான் என்று குறிப்பிடுவோம். இக்கூட்ட முதல்வன் ஊருக்கு எந்த ஒரு நல்லது செய்வதற்கும் விழையும் குணமுடையவர் என்பதால் இக்கூட்டம் விழையன் கூட்டம் என்று  பெயர் பெற்றது என்பதே என் கருத்தாகும். இது போல் சில கூட்டப் பெயர்களுக்கு எழுத்துப் பிழை ஏற்பட்டிருக்கலாம். தமிழ் அறிஞர்கள் அதனை கண்டறிய வேண்டும்.



75.  விழியன் கூட்டம்  -  விழியன் கூட்டம் கொங்கு வேளாளர் கூட்டங்களில் தொன்மைச் சிறப்புடைய கூட்டங்களில் ஒன்று. விளியன் கூட்டம் என்றும் அழைக்கப்படும் இராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கி. பி. 1443 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இராசிபுரத்தில் வெள்ளாளன் வெளியர்களில் கரிய பெருமாள் என்பவர் கைலாசனாதருக்குக் கொடையாக அத்தனூர்க் கிராமத்தைக் கொடுத்த கல்வெட்டு உள்ளது. அதனால் விளியன் (விழியன்) கூட்டத்தாரின் பழம் பெயர் வெளியன் - வெளியர் என்று தெரிகிறது. சங்க இலக்கியங்களில் ‘வெளியன் வேண்மான் ஆய் எயினன்’, வீரை வேண்மான் வெளியன் தித்தன்’ போன்ற அரசர் பெயர்களும், எருமை வெளியனார் என்ற புலவர் பெயரும் பயின்று வருகின்றன. இவர்கள் வேள் + மகன் (வேண்மான்) என்று குறிக்கப்படுவதால் இவர்கள் வேளாளர் என்பது தெளிவு என்று புலவர் திரு.ராசு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் மூவேந்தர்கட்கு மகட்கொடையளிக்கும் வேளிர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.சேரமன்னன் உதயஞ்சேரலாதன் மனைவி வெளியன்வேள் மகள் (வேண்மாள்)நல்லினி என்பவள். வெளியர் கூட்டப் பெண் நல்லினி மக்களே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் ஆகியோர் ஆவர் என்று புலவர் குறிப்பிட்டுள்ளார்.


எனது விளக்கம் 


இராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கி. பி. 1443 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இராசிபுரத்தில் வெள்ளாளன் வெளியர்களில் கரிய பெருமாள் என்பவர் கைலாசனாதருக்குக் கொடையாக அத்தனூர்க் கிராமத்தைக் கொடுத்த கல்வெட்டு உள்ளதாக புலவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இக்கூட்டத்தின் பெயர் விழியன் கூட்டம் என்று சொல்ல இயலாது. அயலூரில் இருந்து வந்த ஒரு இளைஞனுக்கு ஏற்கெனவே அங்கு இருந்து வந்த கூட்டத்தார் யாராவது தன் வீட்டில் முடமான பெண் அல்லது வெள்ளை நிறமுடைய பெண் இருந்து அவளை இந்த இளைஞனுக்கு திருமனஞ் செய்து கொடுத்திருக்கலாம். வெளியூரிலிருந்து வந்த இளைஞன் என்பதால் அவருக்கு வெளியன் அல்லது வெளியார் என்ற பெயர் ஏற்பட்டு அவர் வழி வந்தவர்கள் வெளியன் கூட்டம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். சங்க இலக்கியங்களிலும், புலவர்கள் பெயர்களிலும் வெளியன் என்றே பெயர் காணப்படுவதால் இவர்கள் விழியன் கூட்டம் என்பதற்கு மாறாக வெளியன் கூட்டம் என்று அழைக்கப்படுவதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.



77.  வெண்டுவன் கூட்டம்  -   முதலாம் இராசராசன் (985-1014) காலக் கல்வெட்டு ஒன்றில் ‘வெண்டுவன் அதிருக்குறையான்’ என்ற பெருமகன் ஒருவர் குறிக்கப் பெறுகிறார்.ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வேண்டுவன் என்ற கூட்ட முதல்வர் வழிவந்த வேளாண் பெருமக்கள் வெண்டுவன் கூட்டத்தார் என்று அழைக்கப் பெற்றிருக்கலாம். திரு டி. எம். காளியப்பா ‘வெண்டுக்காய்’ என்பது வெண்டைக்காயின் பெயர்.வெண்டைக்காயை அடையாளச் சின்னமாகக் கொண்டவர்கள் வெண்டுவ கூட்டத்தார் என்று கூறுகிறார்.அவர் வெண்டுவ கூட்டம் தவிர கொங்கு வேளாளர் சமூகத்தில் ‘’வெண்டுஉழவர் கூட்டம்’ ஒன்று தனியாக இருப்பதாகவும் கூறுகிறார். ஒரு சிலர் ‘வெண்டுவர்’ என்பதை ‘வெண்டுழவர்’ எனத் தவறாக உச்சரித்திருக்கலாம்.’வெண்டுழவர் கூட்டம்’ எங்கும் இல்லை என்று புலவர் அவர்கள் கூறியுள்ளார்.நல். நடராசன் ‘வேள்+உழவர்’ என்ற சொல்லே வெண்டுவர் கூட்டம் ஆயிற்று என்று கூறுகிறார். அவ்விரு சொற்கள் ‘வேளுழவர்’ ஆகுமே தவிர வெண்டுவர் என ஆகாது என்று புலவர் கூறுகிறார். திரு, தே.ப.சின்னசாமி வான் மழையை ‘வேண்டுவோர்’ வெண்டுவர் ஆனார்கள் என்று கூறுவதாக புலவர் குறிப்பிட்டுள்ளார். திரு. கு. சேதுராமன் வெண்டைக்காய் விளைவிப்பதில் வல்லவர்கள் வெண்டுவன் கூட்டத்தார் என்று கூறுகிறார்.பிறர்க்காக வெண்டைக்காய் விளைவிக்கும் வெண்டுவன் கூட்டத்தார் வெண்டைக்காயை உண்ண மாட்டார்களாம். பழனித் திருத்தலத்தில் பெரியநாயகி அம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் போது முதல் வடம் பிடிக்கும் உரிமை வேண்டுவன் கூட்டத்தாருக்கே உரியது என்பது சிறப்புமிக்க செய்தியாகும் எனப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.


எனது விளக்கம் 


வெண்டுக்காய் என்பதன் வெண்டைக்காய் என்பதைக் குறிக்கும் வெண்டைக் கூட்டம் என்று பெயர் உண்டாகியிருக்கலாமே. மேலும் மழையை வேண்டுவோர் வெண்டுவர் ஆகினர் என்றால் உழவர் பெருமக்களில் மழை வேண்டாதோர் யார் உள்ளனர்? எனவே இது தவறான கருத்தாகும். வெண்டு என்றால் கரும்பு என்று பொருள் இணையத் தமிழ் பேரகராதியில் உள்ளது.. கீழ்க்கண்ட அகராதியின் படத்தில் 3 - வது பொருள் கரும்பு எனக் குரிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். கரும்பில் பல வகைகள் உண்டு. அவைகளில் ,கன்னல், கழைக்கரும்பு, சீனிக்கரும்பு, பேய்க்கரும்பு,செங்கரும்பு, வெண்கரும்பு 

போன்றவை சில. எனவே  வெண்டு எனப்படும் கரும்பை தொடர்ந்து பயிரிட்டு வந்தவர்களை வெண்டுவன் கூட்டத்தார் என அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்தாகும்.





78.  வெள்ளம்பர் கூட்டம்  -  வெள்ளம்பர் கூட்டத்தை வெள்ளைக் கூட்டம் என்றும் கூறுவார்.திரு. டி. எம். காளியப்பா “வெள்ளம்பர் கூட்டம்” என்பதற்கு வெள்ளை ஆடை அணிந்தவர் என்பது பொருள். வெள் - வெள்ளை நிறமான ; அம்பரம் - ஆடை ; வெண்மையான ஆடை அணிந்தவர்கள் வெள்ளம்பர் கூட்டத்தார் என்று அழைக்கப்பட்டனர்.காணியாட்சிக் கோயிலில் வெள்ளைக் குதிரையை சிலிர்க்க (துலுக்க) வைப்பதும் வெள்ளை நிறமான ஆடை உடுத்தி வெள்ளம்பர் கூட்டப் பெண்கள் திருவிழாக் கொண்டாடுவதும் இக்கூட்ட வழக்கம் என்று எழுதியுள்ளார். திரு. நல். நடராசன் “வெள்ளம்பர் கூட்டம்”என்பது உழவுத் தொழில் அடிப்படையாக ஏற்பட்டப் பெயராகும். வெள்ளம் என்ற சொல் நீரைக் குறிக்கும். வெள்ளத்தைத் தேக்கிப் பயிர் செய்வோர் வெள்ளாளர் எனப்பட்டது போல் வெள்ளம்பர் என்ற பெயரும் உழவுத் தொழில் அடிப்படையாகவே தோன்றியது” என்பார். 


எனது விளக்கம்  


திரு.டி.எம். காளியப்பா அவர்கள் திருவிழாக் காலங்களில் பெண்கள் வெள்ளை நிற ஆடையுடுத்தி கொண்டாடுவர் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக கொங்கு வெள்ளாளரில் கைம்பெண்கள்தான் வெண்ணிற ஆடையுடுத்துவர். அப்படியிருக்கும் பொழுது பெண்கள் வெண்ணிற ஆடையுடுத்திக் கொண்டாடுவர் என்பது உண்மையா என்பதை அறிய வேண்டும். வெள்ளம்பர் என்பதற்கு உழவுத் தொழில் தொடர்பாக அகராதியில் தேடியதில் அவ்வாறு இல்லாமல் வெண்மை நிறமான அம்பர் என்றுதான் பொருள் வருகிறது. அம்பர் என்றால் ஒரு வகை மரப் பிசின் என்பது பொருளாகும். கீழே அதன் பொருளுக்கான அகராதியின் படத்தைக் கொடுத்துள்ளேன்.


அம்பர் என்பதற்கான பொருள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டான கெட்டியான ஒரு மரவகைப் பிசின். நான் முன்பே கூறியபடி மக்கள் காட்டு மரங்களை அழித்து வேளாண் நிலங்களை உருவாக்கினர் என்று கூறியுள்ளேன். அது போல காட்டை அழிக்கும் போதோ அல்லது அழித்த பின் மீதி இருந்த மரங்களில் இவ்வகையானப் பிசின் இருந்திருக்கலாம். அதனாலேயே இவர்களுக்கு வெள்ளம்பர் கூட்டத்தினர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அக்காலத்தில் ஆண்கள் வேட்டியுடன் தோளில் ஒரு துண்டு மட்டுமே நல்லது கெட்டது அனைத்திற்கும் சென்று வந்திருப்பர். ஏன் என்றால் அக்காலத்தில் தையல் இயந்திரம் இல்லாததால் சட்டையை  உருவாக்கியிருக்க முடியாது. எனவே வெண்ணிற ஆடை அணிந்ததினால் இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது என்பது ஏற்க இயலாத ஒன்று. அம்பருக்கான அகராதி விளக்கப் படமும் இங்கு கொடுத்துள்ளேன்.


எனவே இவ்வகை மரப்பிசினால்தான் இக்கூட்டத்திற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.



79.  வெள்ளை கூட்டம்  -    வெள்ளம்பர் கூட்டமும் வெள்ளை கூட்டமும் ஒன்று என ஒருச் சிலர் கூறினாலும் வெள்ளைக் கூட்டம் சார்ந்த கல்வெட்டும் கிடைத்துள்ளதால் தனிதனிக் கூட்டமாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது எனப் புலவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை என்ற பெயர் மிகவும் தொன்மையானது. சங்க இலக்கியங்களில் வெள்ளைக்குடி நாகனார், வெள்ளைக் கணத்தார், வெள்ளை மாளர் முதலிய பெயர்களைக் காணுகின்றோம் என்று புலவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை என்ற சொல் ஆசீவர்கட்கு உரியது என்றும் கூறுவர். ‘செங்காயபன்’ இருப்பதைப் போல ஆசீவகத்தில் ‘வெங்காயபன்’ பெயர் உண்டு. ஒருக்கால் ஆசீவகம் கொள்கை உடையோர் வெள்ளை என்று பெயர் பெற்றிருக்கலாம். 


எனது விளக்கம்  


புலவர் அவர்கள் கூறியபடி ஆசீவகம் தொடர்பு உடையவர்களே வெள்ளை கூட்டத்தினர் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நானும் படித்த சில நூல்களில் ஆசீவகம் பற்றிய குறிப்புகளைப் படித்துள்ளேன். ஆரியர் வருகைக்கு முன்பே மக்கள் ஆசீவக மதத்தைப் பின்பற்றி வந்தனர். ஆசீவக மத அடையாளமாக இரண்டு வெள்ளை யானைகள் இருந்ததாகப் படித்துள்ளேன். மக்களில் அதிகளவு அசீவகத்தைப் பின்பற்றியதால்தான் அதற்கு மாற்றாக விநாயகரை யானைத் தலையைக் கொண்டவராக படைத்தனர். அதற்கு காரணமாக சிவன் விநாயகர் தலையை வெட்டி விட்டதால் வடக்கு திசையில்  யார் இறந்து  கிடந்தாலும் அவர்கள் தலையைக் கொண்டு வரும்படி  கண பூதக் கணங்களை ஏவிய பொழுது அவர்களுக்கு அத்திசையில் யானை ஒன்றைத் தவிர வேறு யாரும் கிடைக்காததால் யானைத் தலையை வெட்டி வந்து கொடுத்ததால் சிவபெருமான் தலை இழந்து இறந்து கிடந்த விநாயகருக்கு யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. இதே போன்ற நிகழ்வு பெரிய புராணத்தில் சிவன் தான் ஒரு  சிவனடியார் வடிவில் ஒரு சிவபக்தனின் வீட்டுக்குச் சென்று பிள்ளைக் கறி கேட்டாராம். அதற்கு அந்த சிவபக்தன் தனது சொந்த மகனையே வெட்டி மனைவியை கறி செய்யச் சொல்லி சிவபெருமான் வந்ததும் அடியாருக்கு பிள்ளைக் கறியை பரிமாறினாராம். அப்பொழுது சிவனடியாராக வந்த சிவன் அந்த அடியாரின் மகனையும் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டால்தான் தான் சாப்பிடுவேன் என்று கூறினார். அப்பொழுதுதான் தன் மகனைத்தான் கறியாக சமைத்த விவரத்தைக் கூறினாராம். உடனே சிவபெருமான் காட்சி தந்து சமைத்து விருந்தாகப் படைக்கப்பட்ட பிள்ளையை உயிரோடு எழுந்து வரச் செய்தாராம். இறந்த சிறுவனை உயிர் பெற்று எழுந்து வரச் செய்த சிவபெருமானால் ஏன் விநாயகரின் தலையைக் கொண்டு வந்து பொறுத்த இயலவில்லை. மேலும் விநாயகர் பற்றிய சிலையோ அல்லது மற்ற விவரங்களோ கி.பி. 2- ஆம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் காண முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூகுளில் தேடினாலே விவரங்கள் கிடைத்து விடும். இதைக் கூறுவதால் நான் கடவுள் நம்பிக்கையற்றவன் அல்ல. என் காணியாட்சி தெய்வத்தை முழுமையாக நம்புகிறவன். எனவே வெள்ளை கூட்டத்தினர் ஆசீவகத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்திருக்கக் கூடும் என்பது என் கருத்தும் கூட.


80.  வேந்தன் கூட்டம் - வேந்தன் என்ற சொல்லுக்கு அரசன், இந்திரன், போன்ற பொருள்கள் உண்டு. ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ என்று தொல்காப்பியம் கூறுகிறது எனப் புலவர் கூறுகின்றார்.தீம்புனல் உலகம், மருதநிலங்களின் தலைவன் இந்திரன். வேந்தனை வழிபடுவோர் வேந்தன் கூட்டத்தார் ஆகியிருக்கலாம் என்று புலவர் கருத்திட்டுள்ளார். திரு. டி. எம். காளியப்பா அவர்கள் “பொள்ளாச்சி,நெகமம்,மூட்டாம்பாலயம் ஆகிய பகுதிகளில் “ஆந்தையும் வேந்தையும் ஒண்ணு” என்ற பழமொழி வழங்குகிறது.வேந்து என்ற சொல்லே வேந்தன் என வழங்கப்பட்டிருக்கலாம்” என்று கூறுகிறார். காணிப் பாடல்களிலும்,இலக்கியங்களிலும்,பொதுவாக வேளாளர் தலைவர்களை வேந்து, வேந்தன்,அரசன்,மன்னன் என்று கூறுவது வழக்கம். அவ்வகையில் சிலரை ‘வேந்தன்’ என்றே அழைக்கு வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறுகிறார். திரு தே.ப.சின்னசாமி வெள்ளத்தை ஆள்பவன் வேந்தன் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார். மூவேந்தர்,பாவேந்தர், நாவேந்தர் போல ஆவேந்தர் இந்த வேந்தன் கூட்டத்தினர் என்பார். திரு.நல். நடராசன் “வேந்தன் என்ற சொல் வேள் +இ =வேந்து என்றாகி அன் என்ற விகுதி சேர்த்து வேந்தன் என்றானது” என்று கூறியுள்ளார்.  


எனது விளக்கம்   


முற்காலத்தில் ஒரு கூட்டத்தின் தலைவன் ஒரு சில கூட்டங்களைக் கட்டி ஆண்டு  வந்திருக்கலாம். இப்பொழுது போல் ஒரு குடும்பத்திற்கு அதிக அளவாக தனிப்பட்ட முறையில் சுமார் ஐம்பது ஏக்கர் நிலங்கள் இருப்பதைப் போல் அக்காலத்தில் இல்லை. ஒரு கூட்டத்திற்கு ஆயிரக் கணக்கில் ஏக்கர் நிலங்கள் இருந்திருக்கக் கூடும். பார்க்கப்போனால் ஒரு சிற்றூர் போல இருந்திருக்கும். அப்படி உள்ள சில கூட்டங்களுக்குத் தலைவனாக இருப்பவனை வேந்தன் என்றழைக்கப் பட்டிருக்கலாம்.பின்னர் மன்னராட்சியில் இவ்வேந்தன் கூட்டத்திற்கு சிறிது சிறிதாக மதிப்பு குறைந்து வந்திருக்கலாம் அல்லது வேறொரு வேந்தனோடு போரிடும் சூழல் ஏற்பட்டு தோற்றிருக்கலாம். என்ன இருந்தாலும் வெற்றி பெற்றாலோ தோற்றாலோ கூட்டத்தின் பெயர் மாறாது அல்லவா? இப்படித்தான் இக்கூட்டத்திற்கு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.



எனது இந்தக் கட்டுரையை படித்தவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட கீழே எனது இணைய அஞ்சல் முகவரியைக் கொடுத்துள்ளேன். அதில் தங்களின் கருத்துகளைப் பதிவிடக் கேட்டுக் கொள்கிறேன். அதே போல் “வெள்ளாள கவுண்டர்கள் அறிய வேண்டியவை” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலைப் பெற  ‘Amazon’ இணைய தளத்திற்கு சென்று Kumar Kaliannan என தட்டச்சு செய்தாலே நூல் வாங்குவதற்கான விவரம் கிடைக்கும். அதில் எழுதிங்கள் சீர் எதற்காகச் செய்கிறோம்? மேலும் நமது இனத்தில் மட்டும் குலம் , குலக்கோயில் என்று சொல்லாமல் கூட்டம் என்றும், காணியாட்சிக் கோயில் என்றும் ஏன் குறிப்பிடுகிறோம் போன்ற பல செய்திகளை அதில் எழுதியுள்ளேன். வாங்கிப் படித்து நம் இனப் பெருமைகளை அறிந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

இணைய அஞ்சல் முகவரி –konguvellaalarkoottam@gmil.com


Comments